நாட்டிங்கம்: நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. ஜான் பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடி தன் அணியை வெற்றிபெற செய்தார்.
நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி நாட்டிங்கம் பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 553 மற்றும் 284 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 539 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாளன்று 72 ஓவர்களில் 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது இங்கிலாந்து. அதை 50 ஓவர்களில் விரட்டி பிடித்துள்ளது அந்த அணி.
இரண்டாவது இன்னிங்ஸில் 93 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இங்கிலாந்து. இருந்தாலும் பேர்ஸ்டோ மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 179 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அந்த கூட்டணி இங்கிலாந்துக்கு வெற்றி கூட்டணியாக அமைந்தது.
ஜானி பேர்ஸ்டோ, 92 பந்துகளில் 136 ரன்களை குவித்து அசத்தினார். அவரது இன்னிங்ஸ் அணுகுமுறை அதிரடியாக இருந்தது. 14 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் இதில் அடங்கும். ஆட்டநாயகன் விருதையும் அவர் வென்றார். இந்த தொடரை இங்கிலாந்து அணி 2-0 என கைப்பற்றியுள்ளது. மேலும் ஒரு போட்டி எஞ்சியுள்ளது.