கனா படத்தை பார்த்து கிரிக்கெட் விளையாட்டில் சாதித்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை தீர்த்தா சதீஷ். இவர் ஐக்கிய அரபு அமீரக அணிக்காக விளையாடி வருகிறார்.
2023 அண்டர் 19 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆசிய அணிகளுக்கான தகுதிச் சுற்று போட்டிகள் மலேசிய நாட்டில் நடைபெற்றன. இதில் ஐக்கிய அரபு அமீரக அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது. அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறார் தமிழகத்தை சேர்ந்த தீர்த்தா சதீஷ். இடது கை விக்கெட் கீப்பர் பேட்டர் இவர். 18 வயதான அவர் அமீரக சீனியர் அணிக்காக கிரிக்கெட் விளையாடி வருகிறார். அவர் கிரிக்கெட் விளையாட்டை ஆர்வத்துடன் விளையாட காரணம் தமிழில் கடந்த 2018 வாக்கில் வெளியான கனா திரைப்படம் தான் காரணம் என தெரிகிறது.
"சிறு வயது முதலே பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வமுடன் விளையாடி வருபவள் எங்கள் மகள் தீர்த்தா. தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கிரிக்கெட் என அனைத்து விளையாட்டிலும் ஈடுபாட்டோடு விளையாடி வந்தாள். கனா படத்தை பார்த்த பிறகு அதில் வரும் கௌசல்யா கதாபாத்திரத்தினால் ஈர்க்கப்பட்டு, தானும் அது போல கிரிக்கெட் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என விரும்பி, அதற்கான முயற்சிகளை முன்னெடுத்தாள்.
தொடர் பயிற்சி மூலமாக அமீரக மகளிர் சீனியர் கிரிக்கெட் அணியில் 17 வயதில் இடம் பிடித்தாள். இப்போது முதலாவது ஐசிசி அண்டர் 19 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட உள்ளார்" என நெகிழ்கிறார் தீர்த்தாவின் தந்தை சதிஷ் செல்வநம்பி.
உலக கோப்பைக்கான தகுதிச் சுற்றில் 5 இன்னிங்ஸ் விளையாடி 175 ரன்கள் எடுத்துள்ளார் அவர். அமீரக அணியின் கேப்டனாகவும் தீர்த்தா செயல்பட்டு வருகிறார். தோனி, ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் கப் ஆகியோர் தான் அவரது ரோல் மாடல் என தெரிகிறது. "கனா படத்தை பார்த்து நாமும் அதே போல முயற்சிக்கலாம் என முடிவு செய்தேன். இப்போது இங்கு வந்துள்ளேன்" என சிம்பிளாக சொல்கிறார் தீர்த்தா.
இது அவரது கனாவின் முதல் படி. தொடர்ந்து அவர் சார்ந்த விளையாட்டில் பல சாதனைகளை படைக்க உள்ளார் அவர். சர்வதேச கிரிக்கெட் வீராங்கனைகளுடன் இணைந்து ஃபேர்பிரேக் இன்டர்நேஷனல் டி20 தொடரிலும் அவர் விளையாடி உள்ளார். அண்டர் 19 மகளிர் டி20 உலகக் கோப்பை அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ளது.