விளையாட்டு

அஸ்வின் பவுலிங்கை கோலி நன்றாக விளையாடுவார்: 17-வது ஓவரில் பந்துவீச அழைத்ததற்கு பிளெமிங் காரணம்

பிடிஐ

தோனி தலைமையில் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நடப்பு ஐபிஎல் கிரிக்கெட்டில் மோசமாக ஆடிவருவதற்கு பல்வேறு காரணிகள் பங்களிப்பு செய்வதாக பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

தோனி, தன்னை பேட்டிங்கில் முன்னால் களமிறக்கிக் கொள்வதில்லை, பதிலாக அஸ்வினை பவுலிங்கில் முடக்கி பேட்டிங்கில் முன்னால் இறக்குவதுமாக அவரது செயல்பாடுகள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது, குறிப்பாக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோலியின் அதிரடி இன்னிங்ஸ் மூலம் புனேயின் மிகப்பெரிய இலக்கைத் துரத்தி வெற்றி பெற்ற போட்டியில் அஸ்வினை 17-வது ஓவரில் தோனி அறிமுகம் செய்ததோடு ஒரே ஓவர்தான் கொடுத்தார். இதனையடுத்து கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் புனே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறும்போது, “ரசிகர்கள் ஒரு அணியின் மீது ஆர்வங்களைக் குவிக்கின்றனர் இதனால் அந்த அணியின் ஆட்டம் பற்றி சற்று கூடுதலாகவே கருத்துகளை ஏற்படுத்தி கொள்கின்றனர். ஆனால் இன்னொரு அணியை ஒருங்கிணைப்பது அவ்வளவு சுலபமல்ல. வீரர்கள் ஒவ்வொருவரும் விரைவில் ஒருவரையொருவர் பிணைத்துக் கொள்ள வேண்டும், அணிச்சேர்க்கை சரிவர அமைய வேண்டும்” என்றார்.

அஸ்வின் விவகாரம் பற்றி கேட்ட போது, “அதாவது தொடக்கத்தில் விக்கெட்டுகளைக் கைப்பற்றினால் ஸ்பின்னர்களைக் கொண்டு வர சரியாக இருக்கும். சில பிட்ச்களில் நாங்கள் இதனைச் செய்யவில்லை. மேலும், சில வீரர்களின் ஆட்டம் பற்றி தெரிந்துள்ள தோனி ஸ்பின்னர்களை சில வீரர்களுக்கு எதிராக கொண்டு வருவதில் தயக்கம் காட்டுகிறார். கோலி அஸ்வினை நன்றாக ஆடக்கூடியவர் (அன்றைய போட்டியில் 17-வது ஓவரில் அஸ்வின் அழைக்கப்பட்டார்)” என்றார்.

மேலும் கூறும்போது, “அஸ்வின் எங்கள் அணியில் இன்னமும் மதிப்பு மிக்க ஒரு வீரராகவே கருதப்படுகிறார். சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும் போது கடந்த போட்டியில் அருமையாக வீசி 16 ரன்களுக்கு 1 விக்கெட்டை வீழ்த்தினார். அவரது திறமைகள் பற்றி நாங்கள் அறிவோம் சூழ்நிலைகள் கொஞ்சம் ஆதிக்கம் செலுத்துகிறது அவ்வளவே, இதற்கு மேல் இதில் எதுவும் இல்லை.

அடுத்த ஐபிஎல் போட்டித் தொடரை எதிர்நோக்குகிறோம், நாங்கள் அட்டவணையில் கடைசியில் இருக்க வேண்டிய அணி அல்ல, முதலிடத்தில் இருக்க வேண்டிய அணி” என்றார் ஸ்டீபன் பிளெமிங்.

SCROLL FOR NEXT