சென்னை: கடந்த 1986-ல் இதே நாளில் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது.
கிரிக்கெட்டின் தாய் மண் என இங்கிலாந்து அறியப்படுகிறது. அந்த நாட்டின் லண்டன் நகரில் அமைந்துள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் கிரிக்கெட் உலகின் மெக்கா என போற்றப்படுகிறது.
இந்த மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மற்ற நாடுகள் கிரிக்கெட் விளையாடும்போதெல்லாம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறி இருக்கும். இந்திய கிரிக்கெட் அணி லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடுகிறது என்றால், இந்திய ரசிகர்கள் ஆர்வத்துடன் போட்டியை பார்ப்பது வழக்கம்.
இங்கிலாந்து நாட்டில் இந்திய அணி மொத்தம் 66 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை விளையாடி உள்ளது. இதில் லார்ட்ஸ் மைதானத்தில் 19 போட்டிகளில் இந்தியா விளையாடி உள்ளது. அதில் 3 போட்டிகளில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றுள்ளது. கபில் தேவ், தோனி மற்றும் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 4 போட்டிகள் சமனில் முடிந்துள்ளன. மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.
இதில் இந்திய அணி கடந்த 1986, ஜூன் 10 அன்று லார்ட்ஸ் மைதானத்தில் முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்தது. கபில் தேவ் தலைமையிலான அந்த அணியில் திலீப் வெங்சர்கார், முதல் இன்னிங்ஸில் சதம் பதிவு செய்தார். மொஹிந்தர் அமர்நாத், 69 ரன்களை கடந்திருந்தார்.
இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்தை 180 ரன்களில் ஆல் அவுட் செய்தது இந்தியா. 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கபில் தேவ், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
அதன்பிறகு 2014 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் இந்தியா லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.