லண்டன்: பிடிமானம் ஏதும் இல்லாமல் தானாக களத்தில் நிற்கும் ஜோ ரூட்டின் பேட் வீடியோ ஒன்று நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. பலரும் இது எப்படி என அது குறித்து சமூக வலைத்தள பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை நேற்று எட்டியிருந்தார். உலக அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த மைல்கல்லை எட்டிய 14-வது வீரராக இணைந்துள்ளார் அவர். 26 சதம் மற்றும் 53 அரை சதங்களை அவர் இந்த பார்மெட்டில் பதிவு செய்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக அனைத்து பார்மெட் கிரிக்கெட்டையும் சேர்த்து 17000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டியிருந்தார். இந்தப் போட்டியில் அவர் சதமும் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் ரூட் நிற்கும் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. அதில் மாயமில்ல, மந்திரமில்ல. பாருங்க பாருங்க.. நல்லா பாருங்க.. என மேஜிக் கலைஞர் போல ரூட் சொல்லாதது மட்டும்தான் குறை. அந்தளவுக்கு உள்ளது அந்த வீடியோ.
இந்த மாயம் இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் நடைபெற்றுள்ளது. அந்த இன்னிங்ஸின் 72-வது ஓவரை நியூசிலாந்து வீரர் ஜேமிசன் வீசினார். அந்த ஓவர் முழுவதும் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் நின்றார் ரூட். நான்காவது பந்தை ஜேமிசன் வீசிய போது ரூட் தனது பேட்டின் ஹேண்டிலை பிடித்திருக்கவில்லை. கிட்டத்தட்ட ஐந்து நொடிகள் வரை அவர் பேட்டை பிடிக்கவே இல்லை.
அந்தக் காட்சி தற்போது கவனத்தை பெற்றுள்ளது. பிடிமானம் ஏதும் இல்லாமல் சில நொடிகள் அப்படியே ஸ்டாண்டு போட்டு நேராக நிறுத்தி வைத்தது போல பேட் நின்றது. பின்னர் லாவகமாக பேட்டினை பிடிக்கிறார் ரூட். இது குறித்து தான் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் தங்களது கருத்தை சொல்லி வருகின்றனர்.