2015-ல் நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத் தில் சென்னையின் எப்.சி. அணி, கோவா அணியைத் தோற்கடித்து சாம்பியன் ஆனது. இறுதி ஆட்டத்துக்குப் பிறகு கோவா அணியினர் நடுவர்கள் தவறான தீர்ப்பு வழங்கியதாகக் கூறி ரகளை செய்தனர். சென்னை அணியின் நட்சத்திர வீரர் இலோனாவுக்கும், கோவா அணியின் உரிமையாளர் தத்தாராஜுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தன்னை தாக்கியதாகக் கூறி இலானோ மீது போலீஸில் புகார் செய்தார் தத்தாராஜ். இதையடுத்து இலானோவை போலீஸார் கைது செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் நீதிபதி மேக்தா தலைமையிலான 5 பேர் கொண்ட இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில், ஐஎஸ்எல் கால்பந்து போட்டிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதற்காக கோவா எப்.சி. அணிக்கு ரூ.11 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் 2016-ம் ஆண்டு சீசனில் கோவா அணிக்கு 15 புள்ளிகள் கழிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் வரும் சீசனில் கோவா அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புள்ளிகள் குறைப்பை நீக்கக்கோரி ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம், கால்பந்து விளையாட்டு முன்னேற்ற நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது.