விளையாட்டு

IND vs PAK | கிரிக்கெட் போட்டி வேண்டும்; இரு அணி வீரர்கள் விருப்பம்: முகமது ரிஸ்வான்

செய்திப்பிரிவு

பெஷாவர்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் வேண்டுமென இருநாட்டு வீரர்களும் விரும்புவதாக தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வான்.

கடந்த 2013-க்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான நேரடி கிரிக்கெட் தொடர்கள் எதுவும் நடத்தப்படவில்லை. இரு அணிகளும் ஐசிசி மற்றும் ஆசிய கோப்பை போன்ற தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன. அண்டை நாடுகளாக இருந்தாலும் அரசியல் ரீதியான சிக்கல் காரணமாக நேரடி தொடர்கள் நடத்தப்படாமல் உள்ளது. கடைசியாக இரு அணிகளும் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் விளையாடி இருந்தன.

இப்போது பாகிஸ்தான் நாட்டில் சர்வதேச கிரிக்கெட் அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகின்றன. ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை அதற்கு உதாரணமாக சொல்லலாம். இந்திய அணி கடைசியாக கடந்த 2005-06 வாக்கில் பாகிஸ்தான் மண்ணில் விளையாடி இருந்தது. இந்நிலையில், நேரடி கிரிக்கெட் தொடர்களில் விளையாட இரண்டு அணிகளை சேர்ந்த வீரர்களும் விரும்புவதாக தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான்.

"இரு அணி வீரர்களும் நேருக்கு நேராக மோதி விளையாடும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட விரும்புகின்றனர். ஆனால் அரசு வட்டார விவகாரங்கள் வீரர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. இந்திய வீரர் புஜாராவுடன் கிரிக்கெட் தொடர்பாக நிறைய பேசினேன்.

அவரிடமிருந்து சிலவற்றை கற்றுக்கொண்டேன். வெவ்வேறு நாட்டை சேர்ந்தவர்களாக நாங்கள் இருந்தாலும் கிரிக்கெட் என்ற ஒற்றை புள்ளியில் இணைத்துள்ளோம். ஆட்டத்தில் அவர் செலுத்தும் கவனத்தை கண்டு நான் வியந்துள்ளேன்" என தெரிவித்துள்ளார் ரிஸ்வான். புஜாராவுடன் அவர் கவுன்டி கிரிக்கெட்டில் சசெக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT