ஹைதராபாத்: மகளிர் உலக குத்துச் சண்டையில் சாம்பியன் பட்டம் வென்ற நிகத் ஐரீனுக்கு 2 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கி உள்ளார் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ். தெலங்கானா உதய தினத்தில் இந்தக் காசோலையை நிகத் வசம் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 19-ஆம் தேதி அன்று உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் சரித்திர சாதனை ஒன்றை படைத்திருந்தார் நிசாமாபாத் பகுதியை சேர்ந்த 25 வயதான நிகத் ஜரீன். அவரது வெற்றியை பலரும் பாராட்டி இருந்தனர். அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் நிகத்.
சிறு வயது முதலே தான் சார்ந்துள்ள விளையாட்டில் விடாமுயற்சியுடன் ஈடுபட்டு வந்த அவர், இந்த வெற்றியை உலக அளவில் பதிவு செய்து அசத்தியிருந்தார். அது குறித்து அவரது தந்தை ஜமீலும் விரிவாக பேசி இருந்தார். பல தடைகளை உடைத்தே இந்த சாதனையை அவர் எட்டியிருந்தார்.
நாட்டுக்காக தங்கம் வென்றதில் மகிழ்ச்சி என தெரிவித்திருந்தார் நிகத். "பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது எனது இலக்கு. ஆனால் இப்போதைக்கு எனது கவனம் எல்லாம் காமன்வெல்த் போட்டிகளின் மீது உள்ளது" என தெரிவித்துள்ளார் அவர்.
ஹைதராபாத் நகரில் உள்ள பொது பூங்காவில் நடைபெற்ற தெலங்கானா உதய தின விழாவில் இந்த 2 கோடி ரூபாய்க்கான காசோலையை நிகத் வசம் வழங்கப்பட்டது. மேலும் இந்த விழாவில் இளையோர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற ஈஷா மற்றும் பத்மஸ்ரீ விருதை வென்ற தர்ஷன் மொகுலையாவுக்கும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.