விளையாட்டு

“ஒருநாள் அணியில் என்னை தோனி தவிர்த்தார்; விலக முடிவு செய்த என்னை சச்சின் தடுத்தார்” - சேவாக் ஷேரிங்

செய்திப்பிரிவு

புது டெல்லி: "2008-ல் ஒருநாள் அணியின் ஆடும் லெவனில் விளையாடுவதற்கான வாய்ப்பை எனக்கு அப்போதைய கேப்டன் தோனி வழங்காத காரணத்தால் நான் ஓய்வு பெற விரும்பினேன். ஆனால், அதை சச்சின் தடுத்தார்" என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக் தகவல் பகிர்ந்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் களத்தில் அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் போனவர்களில் ஒருவர் சேவாக். இந்திய அணிக்காக 104 டெஸ்ட், 251 ஒருநாள் போட்டிகள் மற்றும் 19 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் மொத்தம் 17,253 ரன்கள் எடுத்துள்ளார். மூன்று ஃபார்மெட்டையும் சேர்த்து இவரது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 92.53. அதன் காரணமாக அவருக்கு பந்து வீசும்போது எதிரணி பவுலர்கள் கொஞ்சம் அலர்ட்டாகவே பந்து வீசுவார்கள். கடந்த 2013-ல் அவர் ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், ஓய்வுக்கு பிறகு சுமார் 9 வருடங்கள் கடந்த நிலையில், 2008 ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் ஒருநாள் போட்டிகளில் இருந்து விலக அப்போது முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார் சேவாக்.

"2008 ஆஸ்திரேலிய தொடரில் நான் இருந்தபோது ஓய்வு குறித்து யோசித்தேன். டெஸ்ட் தொடரில் 150 ரன்கள் சேர்த்து ஒரு கம்பேக் கொடுத்திருந்தேன். ஒருநாள் தொடரில் 3-4 முறை முயன்றும் ரன்கள் சேர்க்க முடியவில்லை. அதனால் தோனி என்னை ஆடும் லெவனில் தவிர்த்தார். அப்போது ஓய்வு குறித்து நான் யோசித்தேன்.

டெஸ்ட் கிரிக்கெட் மட்டும் விளையாடலாம் என முடிவு செய்தேன். ஆனால், அதனை தடுத்தார் சச்சின். 'இது உன் வாழ்வில் ஒரு மோசமான கட்டம். கொஞ்சம் காத்திரு. வீட்டுக்கு திரும்பியதும் இதுகுறித்து யோசித்து ஒரு முடிவு எடு' என சச்சின் சொன்னார். நல்ல வேளையாக அப்போது நான் ஓய்வு முடிவை அறிவிக்கவில்லை.

நான் என் மீதான விமர்சனங்கள் குறித்து கவலை கொள்ள மாட்டேன். எனக்கு வேண்டியதெல்லாம் நான் விளையாட வேண்டும், ரன் சேர்க்க வேண்டும், வீடு திரும்ப வேண்டும்" என தெரிவித்துள்ளார் சேவாக்.

கடந்த 2013 ஜனவரி வரையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக சேவாக் விளையாடி இருந்தார். 2011 உலகக் கோப்பை தொடரில் ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதம் உட்பட 380 ரன்கள் குவித்திருந்தார்.

SCROLL FOR NEXT