விளையாட்டு

ஷிகர் தவண், ஆஷிஸ் நெஹ்ரா அசத்தல்: 85 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி- புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்

செய்திப்பிரிவு

ஐபிஎல் தொடரில் மும்பை அணியை 85 ரன்கள் வித்தியாசத்தில் ஐதரா பாத் அணி தோற்கடித்தது. இந்த வெற்றியால் ஐதராபாத் அணி புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது.

விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. ஷிகர் தவண் 57 பந்துகளில் 10 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 82 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். வார்னருடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு அவர் 9.5 ஓவரில் 85 ரன்கள் சேர்த்தார்.

வார்னர் 33 பந்தில், 7 பவுண் டரிகள், 1 சிக்ஸருடன் 48 ரன் எடுத்து ஹர்பஜன்சிங் பந்தில் போல்டானார். அடுத்து வந்த வில் லியம்சன் 2 ரன்னில் ஆட்ட மிழந்து ஏமாற்றம் அளித்தார். 3-வது விக்கெட்டுக்கு ஷிகர் தவணுடன் இணைந்த யுவராஜ்சிங் அதிரடியாக விளை யாடி 23 பந்தில், 3 பவுண் டரிகள், 2 சிக்ஸருடன் 39 ரன்கள் குவித்து வலுவான ஸ்கோரை சேர்க்க உதவினார்.

அவர் 19.4-வது ஓவரில் மெக்லி னஹன் பந்தில் ‘ஹிட் விக்கெட்' முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹென்ரிக்ஸ் இரு பந்தில் 1 ரன் மட்டுமே எடுத்தார். மும்பை தரப்பில் ஹர்பஜன் சிங் இரு விக்கெட் கைப்பற்றினார். 178 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது.

முதல் ஓவரின் கடைசி பந்தில் ரன் எதும் எடுக்காத நிலையில் பார்த்திவ் படேலை எல்பிடபிள்யூ ஆக்கினார் புவனேஷ்வர் குமார். அடுத்த ஓவரின் முதல் பந்தில் ரோஹித் சர்மா 5 ரன்னில் ஆஷிஸ் நெஹ்ரா பந்தில் போல்டானார். அடுத்து களம்புகுந்த அம்பாட்டி ராயுடுவை ரன் எதும் எடுக்காத நிலை யிலும், ஜாஸ் பட்லரை 2 ரன்னிலும் வெளியேற்றினார் நெஹ்ரா.

4 ஓவரில் 30 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து மும்பை அணி தவித்தது. அதன் பின்னர் வந்த கிருனால் பாண்டியா 17, பொல்லார்டு 11, ஹர்திக் பாண்டியா 7, டிம் சவுத்தி 3, மெக்லினஹன் 8, பும்ரா 6 ரன்களில் ஆட்டமிழக்க மும்பை அணி 16.3 ஓவரில் 92 ரன்களுக்கு சுருண்டது.

ஐதராபாத் தரப்பில் நெஹ்ரா, முஸ்டாபிஸூர் ரஹ்மான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 85 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஐதராபாத் அணி 6-வது வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி 12 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது. ஆட்டநாயகனாக நெஹ்ரா தேர்வானார்.

SCROLL FOR NEXT