கோவில்பட்டியில் நடந்த தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டியில் உத்தரபிரதேசம் அணி வெற்றி பெற்று 2-வது முறையாக சாம்பியன் கோப்பையை வென்றது.
கோவில்பட்டியில் உள்ள செயற்கை புல்வெளி மைதானத்தில் 12-வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி கடந்த 17-ம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு இறுதி போட்டி நடந்தது. முன்னதாக மாலை 4.30 மணிக்கு 3, 4-வது இடங்களுக்கான போட்டி நடந்தது. இதில், ஹரியாணா அணியும், ஒடிசா அணியும் மோதின. ஹரியாணா அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்தது. இந்த அணியை சேர்ந்த விகாஷ் சிறந்த ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டார்.
இரவு 7.30 மணிக்கு நடந்த இறுதிப் போட்டியில் உத்தரபிரதேசம் அணியும், சண்டிகர் அணியும் மோதின. இதில், உத்தரபிரதேசம் அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வென்றது. இந்த அணியைச் சேர்ந்த சர்தானந்த திவாரி சிறந்த ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஆண்டு கோவில்பட்டியில் நடந்த 11-வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டியிலும் இந்த அணிதான் சாம்பியன் பட்டம் வென்றது.
தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் கனிமொழி எம்.பி. தலைமை வகித்து, வெற்றி பெற்ற உத்தரபிரதேசம் அணிக்கு கோப்பையை வழங்கினார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், சுற்றுச்சூழல்- காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் சாரு, கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர் கா.கருணாநிதி, ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர் சேகர் ஜெ.மனோகரன், கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், ஒன்றிய திமுக செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.