அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற 131 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
நடப்பு சீசனின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், பேட்டிங் தேர்வு செய்தார். மறுபக்கம் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, முதலில் பந்துவீச ஆர்வமாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
ராஜஸ்தான் அணிக்காக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் தொடக்க வீரர்களாக இறங்கினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 31 ரன்கள் சேர்த்தனர். ஜெய்ஸ்வால், 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து வந்த அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், பட்லருடன் 30 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். இருந்தும் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது ராஜஸ்தான்.
சஞ்சு சாம்சன் (14 ரன்கள்), படிக்கல் (2 ரன்கள்), பட்லர் (39 ரன்கள்), ஹெட்மயர் (11 ரன்கள்), அஸ்வின் (6 ரன்கள்), போல்ட் (11 ரன்கள்), மெக்காய் (8 ரன்கள்), ரியான் பராக் (15 ரன்கள்) எடுத்து அவுட்டாகி இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழந்து 130 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான். 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டி வருகிறது குஜராத்.
குஜராத் அணிக்காக ஹர்திக் பாண்ட்யா (3 விக்கெட்கள்), சாய் கிஷோர் (2 விக்கெட்கள்), ரஷீத் கான், யஷ் தயாள் மற்றும் ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.