இந்திய அணியுடன் தனது 18 மாத கால அனுபவம் தன் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் என்று கூறிய ரவிசாஸ்திரி கோலியின் வளர்ச்சி குறித்து பாராட்டியுள்ளார்.
செய்தி நிறுவனத்துக்கு ரவி சாஸ்திரி அளித்த பேட்டியில், “இந்திய கிரிகெட்டுடன் ஒரு வீரராக பிறகு ஒரு இயக்குநராக இணைந்து பணியாற்றியதில் இந்த 18 மாத கால அனுபவம் என்னால் மறக்க முடியாத தருணங்களாகும்.
நாங்கள் ஒரு அணியாகச் சாதித்ததை நினைத்துப் பார்க்கும் போது இந்த 18 மாத கால அனுபவம் மறக்க முடியாதது. நான் ஒரு வீரராக வெற்றிகளை ருசித்துள்ளேன். 1985-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட், 1983 உலகக்கோப்பை என்று நான் மிகவும் இனிமையான நினைவுகளை அசை போடுவேன், அந்த அனுபவம் மூலம் நான் பெருமையடைகிறேன் என்றால், அணி இயக்குநராக இருந்த காலக்கட்டம் சிறப்பு வாய்ந்தது என்றே நான் கருதுகிறேன்.
இந்தக் காலக்கட்டத்தில் அணியின் வெற்றிகளை நினைத்துப் பாருங்கள். இங்கிலாந்தை இங்கிலாந்தில் ஒருநாள் போட்டிகளில் வென்றோம். ஆஸ்திரேலியாவை எந்த ஒரு வடிவத்திலும் ஒரு அணி ஒயிட் வாஷ் செய்துள்ளது என்றால் அது நம் அணிதான் (டி20 3-0 வெற்றி). இலங்கையில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை வென்றோம், நீண்ட இடைவேளைக்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவில் தொடரை வென்றோம்.
அணி இயக்குநராக பொறுப்பேற்கும் போது உயர்ந்த நிலையை எட்ட குறிக்கோள் மேற்கொண்டேன், ஆனால் என்ன சாதிக்க முடியும் என்பதை நாம் அறிவது கடினம்.
இந்த வெற்றிகளில் எது சிறந்தது என்பதை நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும், எனக்கு ஒப்பிடுதல் பிடிக்காது. அணியில் நிலை பற்றி பிசிசிஐ-யிடம் நீண்ட நாட்களுக்கு முன்னால் பேசினேன், எனது கருத்துகளை கொடுத்திருக்கிறேன், இதற்கு மேல் நான் எதுவும் கூற மாட்டேன்.
விராட் கோலியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை, ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்ட் போட்டிகளில் 4 சதங்கள். ஒருவரும் இதனைச் சுலபமாக வீழ்த்தி விட முடியாது. அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் அபாரமாக ஆடி வருகிறார் அதனை மறுக்கவில்லை. சுமார் 1,000 ரன்கள் பக்கம் ஐபிஎல் கிரிக்கெட்டில் குவித்துள்ளார். இதெல்லாம் அருமைதான். ஆனாலும் ஆஸ்திரேலிய மண்ணில் 4 டெஸ்ட் போட்டிகளில் 4 சதங்கள் என்பதை எதுவும் வீழ்த்த முடியாது.
சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மென் 28 வயது முதல் 32 வயது வரை உச்சத்திற்கு செல்வார். அவர் இன்னமும் உச்சத்தை எட்டவில்லை, இந்த நிலையை எட்டும்போது இதற்கு மேலும் பல சாதனைகளை கோலி குவிப்பார்.
3 வடிவங்களிலும் அவர் கேப்டன் பொறுப்பு வகிப்பார். அவருக்கு இப்போது 27 வயதுதான் ஆகிறது, இன்னும் கால அவகாசம் உள்ளது.
எனது காலக்கட்டத்தில் அனைத்து வீரர்களும் தங்கள் ஆட்டத்தில் முன்னேற்றம் கண்டார்கள் என்றாலும் குறிப்பாக ரஹானே, ஷிகர் தவண், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரைக் கூறுவேன்” என்றார் சாஸ்திரி.