விளையாட்டு

2019 உலகக்கோப்பை வரை கேப்டனாக தோனி தாக்குப்பிடிப்பாரா? - கங்குலி சந்தேகம்

இரா.முத்துக்குமார்

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணியின் கேப்டன் யார் என்பதை அணித் தேர்வுக்குழுவினர் உறுதி செய்து கொள்வது நல்லது என்று சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

இந்தியா டுடே ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியதாவது:

உலகில் உள்ள எந்த ஒரு அணியும் தங்களது எதிர்காலத்தை திட்டமிடவே செய்யும். ஆனால் எனது கேள்வி என்னவெனில் இன்னும் 3-4 ஆண்டுகளுக்கு தோனி கேப்டனாக நீடிக்க முடியும் என்று அணித் தேர்வாளர்கள் கருதுகின்றனரா என்பதே.

ஒரு கேப்டனாக அவர் அனைத்தையும் சாதித்து விட்டார் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. ஆனால் அடுத்த 4 ஆண்டுகள் நீடித்து 2019 உலகக்கோப்பையில் கேப்டனாகத் தொடருவதற்கு தோனி தாக்குப்பிடிப்பாரா என்பதைப் பார்க்க வேண்டும். அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டுமென்று நான் கூறவில்லை. அவர் தொடர்ந்து விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மெனாக குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். இந்திய அணிக்கு ஒருநாள், டி20களுக்கு தோனியின் பங்களிப்பு இன்னமும் தேவை என்பதில் எனக்கு ஐயமில்லை.

அவர் 9 ஆண்டுகளாக கேப்டனாக இருந்து வருகிறார். இது மிக நீண்ட காலமாகும். அடுத்த 4 ஆண்டுகள் அவர் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு கேப்டனாக அவரது திறமை நீடிக்குமா? அவர் ஏற்கெனவே டெஸ்ட் கிரிக்கெட்டைத் துறந்து தற்போது ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் மட்டும் ஆடி வருகிறார், என்ற கங்குலி 2019 உலகக்கோப்பையிலும் தோனிதான் வழிநடத்த வேண்டுமா என்பதை தேர்வுக்குழுவினர் சிந்திக்க வேண்டும் என்றும் அவர்கள் பதில் ‘ஆம்’ என்றால் அது தனக்கு ஆச்சரியமளிப்பதாகவே இருக்கும் என்றார்.

விராட் கோலிக்கு பாராட்டு..

ஒவ்வொரு முறையும் தன்னை மேம்படுத்திக் கொண்டே வருகிறார் விராட் கோலி. சீரான பேட்டிங் என்றால் இப்போதைக்கு உலகின் சிறந்த வீரர் கோலிதான். டெஸ்ட் கேப்டனாக அவரது சாதனை நன்றாகவே உள்ளது, களத்தில் அணுகுமுறையும் அபாரமானது, என்றார் கங்குலி.

SCROLL FOR NEXT