மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் செசபிள் மாஸ்டர்ஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா இரண்டாம் இடம்பிடித்துள்ளார். இறுதிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரனிடம் தோல்வியைத் தழுவினார்.
இணைய வழியில் நடைபெற்ற இந்தத் தொடரில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வந்தார் பிரக்ஞானந்தா. அதனால், அவரது ஆட்டத்தை பலரும் வெகுவாக பாராட்டி இருந்தனர். குறிப்பாக, அவருக்கு எதிராக விளையாடியவர்களே அவரது திறனை பாராட்டியுள்ளனர். அதில் ஒருவர் சீன வீரர் டிங் லிரன். மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் நிகழ்வின் இறுதிப் போட்டியில் விளையாடிய முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் பிரக்ஞானந்தா.
Road to Finals: இந்தத் தொடரின் முதல் போட்டியில் சதுரங்க விளையாட்டின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. காலிறுதியில் சீனாவின் வெய் யி-யை (Wei Yi) வீழ்த்தினார். அரையிறுதியில் தரவரிசையில் பத்தாவது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை டை பிரேக்கர் முறையில் வீழ்த்தினார். அதன் பலனாக அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இறுதிப் போட்டியில் அவர் உலகின் நம்பர் 2 வீரரான சீனாவின் டிங் லிரனை எதிர்கொண்டார். இரண்டு நாட்கள் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதல் நாளன்று கொஞ்சம் பின்னடைவை சந்தித்தார். இருந்தும் கடைசி நாளன்று கம்பேக் கொடுக்க முடிந்தவரை முயற்சித்து பார்த்தார். ஆனாலும் சில சிறு தவறுகளால் ஆட்டத்தை இழந்தார்.
தோல்வியை புன்சிரிப்பில் கடந்த பிரக்ஞானந்தா: இறுதி ஆட்டத்தில் எப்படியேனும் கம்பேக் கொடுக்க வேண்டுமென்ற முனைப்புடன் 64 கட்டத்திற்க்குள் அங்கும், இங்குமாக காய்களை நகர்த்தி லிரனுக்கு ஆட்டத்தில் சவால் கொடுக்க முயன்றார். ஆனால் அவரது பாதைகள் அனைத்தும் தடைபட்டுள்ளதை ஒரு கட்டத்தில் அறிந்து கொண்டு ஒரு புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு கடந்து வந்துள்ளார் பிரக்ஞானந்தா.
இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தாவின் ஆட்டத்தை பார்த்து அசந்து போன இங்கிலாந்து நாட்டின் கிராண்ட்மாஸ்டரும், வர்ணனையாளருமான டேவிட் ஹோவெல், "அவரது ஆட்டத்தை பார்த்து நான் வாயடைத்துப் போனேன். அவர் மிகவும் அற்புதமாக விளையாடினார். என்னவொரு ஆட்டம்" என தெரிவித்துள்ளார்.
16 வயது சிறுவன்: சதுரங்க உலகில் பல சாதனைகளை படைத்து வருகிறார் 16 வயதான பிரக்ஞானந்தா. மிக இளம் வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தையும் அவர் வென்றுள்ளார். கடந்த 2013-ல் உலக இளையோர் சதுரங்க சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று அசத்தினார். கடந்த ஏப்ரல் மாதம் ஐஸ்லாந்தில் நடைபெற்ற ரெய்க்யவிக் ஓபன் சதுரங்க போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தார் பிரக்ஞானந்தா. சில மாதங்களுக்கு முன்னர் கார்ல்செனை வீழ்த்தி கவனம் ஈர்த்தார். நான்கு நாட்களுக்கு முன்னர் மீண்டும் அவரை வீழ்த்தி இருந்தார்.
அரையிறுதி போட்டிக்கு முன்னதாக மத்திய ஐரோப்பிய நேரமான மாலை 6 மணி என்பது இந்தியாவில் குழந்தைகள் தூங்கும் நேரம் அல்லாவா என பிரக்ஞானந்தாவை சிறுவனாக எண்ணி ஒரு ட்வீட் செய்திருந்தார் அனிஷ் கிரி. அவர்கள் இருவரும் அந்த நேரத்தில் தான் விளையாடி இருந்தனர். ஆனால் அந்தப் போட்டியில் வென்ற கையோடு மறுநாள் பொதுத் தேர்விலும் கலந்து கொண்டவர் பிரக்ஞானந்தா. அது அவரது அறிவுத்திறன் முதிர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும்.
எங்களுக்கு அவன் குழந்தை தான்: "எங்களை பொறுத்தவரையில் அவன் குழந்தை தான். அவனை பள்ளிக்கு அழைத்து சென்று வருவது நான் தான். சில நேரங்களில் குறும்பும் செய்வான். அவன் அம்மா அவனுக்கு உணவு கட்டி தருகிறார். வீட்டில் சைக்கிள் ஓட்டும் போது சமயங்களில் தவறி கீழே விழுகிறான். ஆனாலும் அவன் இலக்கை அடைய எந்த அளவுக்கு உழைக்க வேண்டும் என்பதை அவன் அறிந்து வைத்துள்ளான்" என சொல்கிறார் பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ் பாபு.
இருந்தாலும் இப்போது அவர் அதிகம் கார்ட்டூன் சேனல் பார்ப்பது இல்லையாம். செய்தி மற்றும் நகைச்சுவை சேனல்களை தான் அவர் விரும்பி பார்க்கிறாராம். அவர் வெளிநாடு செல்லும் போது அவரது அம்மா நாகலட்சுமி உடன் சென்று வருவதாக தகவல்.
பொதுத் தேர்வு ஒரு பக்கம் இருந்தாலும் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் வரை சதுரங்க விளையாட்டில் பயிற்சி செய்து வந்துள்ளார். இது அவரது பயிற்சியாளர் கொடுத்த அட்வைஸ் தான் காரணம் என தெரிகிறது.
"சிறு பிள்ளையாக இருந்த நாட்களில் இருந்தே அவன் அதிகம் உணர்ச்சிகளை வெளிப்படுத்த மாட்டான். வெற்றி பெற்றால் சிறு புன்னகை அவன் முகத்தில் இருக்கும். தோல்வியை தழுவினால் சதுரங்க கட்டங்களை சில நிமிடம் அப்படியே உற்றுப் பார்ப்பான். கார்ல்செனை வீழ்த்தியபோது கூட மிகவும் கூலாக எங்களிடம் அதனை சொன்னான். அடுத்த சில நிமிடங்களில் தூங்கச் சென்றுவிட்டான்" என்கிறார் ரமேஷ் பாபு.
இது அவரது மென் தன்மையை காட்டினாலும் அழுத்தம் மிகுந்த சூழலை கையாளும் அவரை முதிர்ச்சியின் வெளிப்பாடு எனவும் இதனை சொல்லலாம். "நிச்சயமாக இது பெரிய விஷயம் தான். ஆனால் இதனை இது வழக்கமானது என்று நான் நினைக்கிறேன். நான் என் பணியை தொடர்ந்து செய்வேன்" என ஒருமுறை சொல்லியுள்ளார் பிரக்ஞானந்தா. இந்தத் தொடரில் இரண்டாம் இடம்பிடித்த அவருக்கு 15000 அமெரிக்க டாலர்கள் பரிசாக கிடைத்துள்ளது.