கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் லக்னோ அணியை வீழ்த்தி குவாலிபையர் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது பெங்களூரு அணி. கேஎல் ராகுல் சிறப்பாக ஆடிய போதிலும், கடைசி கட்டத்தில் அவரை வீழ்த்தியதுடன் தொடர்ந்து இரண்டு விக்கெட்கள் எடுத்து லக்னோ கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஹேசில்வுட்.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனுக்கான எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் 208 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி முதல் ஓவரிலேயே முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. கடந்த போட்டியில் செஞ்சுரி அடித்த குயிண்டன் டி காக் இப்போட்டியில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்து வெளியேறினார். ஒன்டவுனில் மனன் வோராவும் நிலைக்க தவறினார். 19 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். எனினும் கேப்டன் பொறுப்பை உணர்ந்து விளையாடினார் கேஎல் ராகுல்.
அவருடன், தீபக் ஹூடாவும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஹூடா அதிரடியாக தொடங்கினார். 4 சிக்ஸர்கள் உதவியுடன் 26 பந்தில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் அவர். ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும், மறுபுறம் தனது அதிரடியை தொடர்ந்தார் கேஎல் ராகுல். இறுதி ஓவர்களை நெருங்கியபோது அணியின் ரெக்கோயர் ரெட் அதிகமானது. ஆனால் அலட்டிக்கொள்ளாமல் சீரான இடைவெளியில் சிக்ஸர்களை பறக்கவிட்ட ராகுல், அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்.
கடைசி இரண்டு ஓவர்களில் வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்ட போது சிக்ஸ் அடிக்க முயன்று கேட்ச் ஆனார் ராகுல். அவர் 79 ரன்கள் எடுத்திருந்தார். ராகுலின் அவுட்டை அடுத்து மைதானத்தில் நிலவிவந்த நிசப்தம் விலகி ஆர்ப்பரிப்பு நிலவியது. பெங்களூரு வீரர்களிடம் இதே ஆர்ப்பரிப்பு காணப்பட்டது. ஏனென்றால் ராகுல் வெளியேறிய அடுத்த பந்தே குர்னால் பாண்டியாவும் வந்த வேகத்தில் காட்டன் போல்ட் ஆகி வெளியேறினார்.
6 பந்துகளுக்கு 24 ரன்கள் தேவை என்ற நிலையில் களத்தில் இருந்த எவின் லூயிஸ் பக்கம் அனைவரின் கவனமும் திரும்பியது. ஆனால் அவர் நான் ஸ்ட்ரைக் என்டில் இருந்தார். ஸ்ட்ரைக்கில் இருந்த துஷ்யந்த் சமீரா ஒரு சிக்ஸ் அடித்தாலும், 2 பந்துகளில் 15 ரன்கள் தேவைப்பட்டதால், அப்போதே பெங்களூரு வெற்றி உறுதியானது. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்து லக்னோ தொடரில் இருந்து வெளியேறியது.
கோப்பையை நோக்கி பயணத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் ஒரு வெற்றியை பெற்று பெங்களூரு குவாலிபையர் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. வெள்ளிக்கிழமை நடக்கும் குவாலிபையர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது பெங்களூரு.
பெங்களூரு இன்னிங்ஸ்: டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல், பவுலிங் தேர்வு செய்தார். அதனால் பெங்களூரு அணி முதலில் பேட் செய்தது. அந்த அணிக்காக விராட் கோலி மற்றும் கேப்டன் டூப்ளசி தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். டூப்ளசி, ரன் ஏதும் எடுக்காமல் முதல் ஓவரில் விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து பேட் செய்ய வந்த ரஜத் பட்டிதார், கோலியுடன் 66 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். கோலி, 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல் மற்றும் லோம்ரோரும் நீண்ட நேரம் கிரீஸில் நிலைக்கவில்லை. 115 ரன்களுக்கு நான்கு விக்கெட்களை இழந்திருந்தது பெங்களூரு.
களத்தில் ஒற்றை ஆளாக போராடிக் கொண்டிருந்த பட்டிதார் உடன் கூட்டு சேர்ந்தார் தினேஷ் கார்த்திக். இருவரும் 92 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பட்டிதார், 54 பந்துகளில் 112 ரன்களை சேர்த்தார். ஐபிஎல் அரங்கில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர் (Uncapped Player) பதிவு செய்த சதங்களின் வரிசையில் இது நான்காவது சதம். ஆர்சிபி அணிக்காக பிளே-ஆஃப் சுற்றில் அதிக ரன்களை பதிவு செய்த வீரர், ஐபிஎல் வரலாற்றின் பிளே-ஆஃப் சுற்றில் சதம் பதிவு செய்த ஐந்தாவது வீரர் என்ற சாதனையை இதன் மூலம் அவர் படைத்துள்ளார். தினேஷ் கார்த்திக், 23 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 207 ரன்களை எடுத்தது பெங்களூரு.