விளையாட்டு

IPL 2022 Qualifier 1 | பட்லர் அதிரடி - குஜராத் அணிக்கு 189 ரன்கள் இலக்கு

செய்திப்பிரிவு

கொல்கத்தா: நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் குவாலிஃபையர் போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற 189 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் அணி.

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடப்பு சீசனின் முதல் குவாலிஃபையர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பவுலிங் தேர்வு செய்தார். அதனால் ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. அந்த அணிக்காக ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

3 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார் ஜெய்ஸ்வால். தொடர்ந்து களத்திற்கு பேட் செய்ய வந்த அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 26 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து அவுட்டானார். படிக்கல் 28 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

மறுபக்கம் விளையாடிக் கொண்டிருந்த பட்லர் மிகவும் நிதானமாக விளையாடி வந்தார். 15 ஓவர்கள் முடிவில் 35 பந்துகளை சந்தித்து 37 ரன்கள் எடுத்திருந்தார் அவர். ஆனால் கடைசி ஐந்து ஓவர்களில் தனது ஆட்டத்தில் அப்படியே வேகத்தை கூட்டினார். டெத் ஓவர்களில் மட்டும் அவர் எதிர்கொண்ட 21 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அசத்தினார். ராஜஸ்தான் இன்னிங்ஸில் ஒரே ஒரு பந்து எஞ்சியிருக்க ரன் அவுட்டானார்.மொத்தம் 56 பந்துகளில் 89 ரன்களை எடுத்திருந்தார் அவர்.

20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி சார்பில் ஷமி, யாஷ் தயால், சாய் கிஷோர் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டுகிறது குஜராத். இந்த சேஸிங் மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ராஜஸ்தான் இரண்டாவதாக பவுலிங் செய்து ஸ்கோரை டிஃபண்ட் செய்யும் கலையில் கைதேர்ந்த அணி. அதற்கு காரணம் அந்த அணியின் பவுலிங் யூனிட். அதே நேரத்தில் குஜராத் சேஸிங்கில் கைதேர்ந்த அணியாகும். மேட்ச் வின்னிங் பேட்ஸ்மேன்கள் நிறைந்த அணி அது.

SCROLL FOR NEXT