ஜகார்த்தா: ஆடவருக்கான ஆசிய கோப்பை ஹாக்கியில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நேற்று தொடங்கிய இந்தத் தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியது. இதன் 9-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அறிமுக வீரரான செல்வம் கார்த்தி கோல் அடித்தார். தமிழகத்தின் அரியலூரைச் சேர்ந்த செல்வம் கார்த்தி அடித்த கோலால் இந்திய அணி 1-0 என முன்னிலை வகித்தது.
இதன் பின்னர் இரு அணிகள் தரப்பில் கோல் அடிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இரு அணி வீரர்களுமே பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோல்களாக மாற்றத் தவறினர். போட்டி முடிவடைய ஒரு நிமிடமே இருந்த நிலையில் பாகிஸ்தான் வீரர் ராணா கோல் அடித்தார்.
இதனால் ஆட்டம் சமநிலையை எட்டியது. இதற்கு பதிலடி கொடுக்க இந்திய அணி வீரர்கள் முயன்ற போதிலும் சாத்தியமாகவில்லை. முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந் தது. இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் இன்று ஜப்பானுடன் மோதுகிறது.