விளையாட்டு

நிகத் ஜரீனை குத்துச்சண்டை வீராங்கனையாக வளர்த்தது ஒருபோதும் எளிதாக இருந்ததில்லை - மனம் திறக்கும் பெற்றோர்

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற மகளிருக்கான உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டையில் இந்தியாவின் நிகத் ஜரீன் 52 கிலோ எடைப் பிரிவு இறுதி சுற்றில் தாய்லாந்தின் ஜிட்பாங் ஜூடாமாஸை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற 5-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் நிகத் ஜரீன்.

நிகத் ஜரீன் தங்கம் வென்றதை வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சியில் கண்டுகளித்த அவரது குடும்பத்தினர் வெற்றியை கொண்டாடினர். நிகத் ஜரீனின் தந்தை மொகமது ஜமீல் அகமது கூறும்போது, “நிகத் ஜரீன், தங்கப் பதக்கம் வென்று ஒட்டுமொத்த நாட்டையும் பெருமைப்படுத்தியுள்ளார்.

அவரின் வெற்றியை, குத்துச்சண்டை பயணத்தில் அவருக்கு ஆதரவளித்த மில்லியன் கணக்கான இந்தியர்களுக்கு அர்ப்பணிக்கிறோம்.

இந்த ஆண்டு ஸ்ட்ராண்ட்ஜா சர்வதேச சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற பிறகு, அவர் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார். அந்த வெற்றி அவள் மனநிலையை மாற்றியது. எல்லாமே திட்டமிட்டபடி நடந்தால் உலகில் யாரையும் வெல்ல முடியும் என்று அவள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தாள். நிகத் ஜரீனின் கனவை நனவாக்க உதவிய அனைத்து பயிற்சியாளர்கள், இந்திய விளையாட்டு ஆணையம், மத்திய விளையாட்டு அமைச்சகம், தெலங்கானா மாநில அரசு ஆகியோருக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம்” என்றார்.

நிகத் ஜரீனின் தாய் பர்வீன் சுல்தானா கூறும்போது, “நாங்கள் நீண்ட நாட்களாகக் காத்திருந்த நாள் இது. இது எங்கள் முழு குடும்பத்திற்கும் மிகப்பெரிய தருணம் மற்றும் நிகத் ஜரீன் நாட்டிற்கு பதக்கம் வென்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

அவளை ஒரு சாம்பியன் குத்துச்சண்டை வீராங்கனையாக வளர்ப்பது ஒருபோதும் எளிதாக இருந்ததில்லை. நண்பர்கள், உறவினர்கள் என பலரும் கேலி செய்த சம்பவங்கள் ஏராளம். ஆனால், தன்னம்பிக்கையுடன் நிகத்தை விளையாட வைத்தோம். எங்களது அனைத்து முயற்சிகளுக்கும் பலன் கிடைத்துள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT