விளையாட்டு

IPL 2022 | “சென்னைக்கு நன்றி சொல்வதற்காக அடுத்த சீசனில் நிச்சயம் விளையாடுவேன்” - தோனி

செய்திப்பிரிவு

மும்பை: சென்னைக்கு நன்றி சொல்வதற்காக அடுத்த சீசனில் நிச்சயம் விளையாடுவேன் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான டாஸின் போது இதனை அவர் பகிர்ந்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் சுற்றோடு வெளியேறுகிறது சென்னை சூப்பர் கிங் அணி. கடந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு இந்த சீசன் ஏனோ அத்தனை சுலபமாக அமையவில்லை. கேப்டன் மாற்றம் போன்ற சிக்கல்களை எதிர்கொண்டது சென்னை. இன்று ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடப்பு சீசனில் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்துள்ளது.

டாஸின் போது அடுத்த சீசனில் சிஎஸ்கே கேப்டன் தோனி விளையாடுவாரா? என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. இந்த போட்டிக்கு முன்னதாகவே தோனி, அடுத்த சீசனில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்திருந்தது. ரசிகர்கள் அந்த கேள்வியை எழுப்பி இருந்தனர்.

"நிச்சயம் அடுத்த சீசனில் விளையாடுவேன். ஏனெனில் சென்னைக்கு நன்றி சொல்லாமல் இருந்தால், அது நியாயமானதாக இருக்காது. இதற்கான காரணம் ரொம்பவே சிம்பிள். சிஎஸ்கே ரசிகர்களுக்கு அப்படி செய்வது நன்றாக இருக்காது" என சொல்லி சிஎஸ்கே ரசிகர்களின் நெஞ்சில் பாலை வார்த்துள்ளார் தோனி.

கடந்த நவம்பரில் சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தோனி பங்கேற்றார். அப்போது தான் விளையாடும் கடைசி டி20 போட்டி சென்னையில் தான் என தெரிவித்திருந்தார். இருந்தாலும் அது அடுத்த ஆண்டா அல்லது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உள்ளான கால கட்டத்திலோ நடக்கலாம் என புதிர் போடும் வகையில் சொல்லி இருந்தார் தோனி.

கரோனா காரணமாக நடப்பு சீசனுக்கான போட்டிகள் அனைத்தும் மும்பை, கொல்கத்தா மற்றும் அகமதாபாத் நகரங்களில் நடைபெறுகிறது. சென்னையில் ஐபிஎல் போட்டி எதுவும் நடத்தப்படவில்லை. அதனால் சொன்னபடி தனது வாக்கை தோனி காப்பாற்றியுள்ளார். இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT