இஸ்தான்புல்: மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 52 கிலோ எடைப்பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் இந்திய வீராங்கனை நிகத் ஜரீன்.
துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடப்பு ஆண்டுக்கான மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 8-ம் தேதி தொடங்கியது. வரும் 20-ம் தேதி வரையில் இந்த போட்டி நடைபெறுகிறது. 73 நாடுகளைச் சேர்ந்த 310 வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்தியாவை சேர்ந்த 12 வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளனர். இதில் தான் 52 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை நிகத் ஜரீன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்
25 வயதான நிகத் ஜரீன், தெலங்கானா மாநிலம் நிசாமாபாத் பகுதியை சேர்ந்தவர். அவரது அப்பா முகமது ஜமீல் அகமது தான் குத்துச்சண்டையை அறிமுகம் செய்துள்ளார். முதல் ஓராண்டு குத்துச்சண்டை விளையாட்டின் அடிப்படை பாடத்தை அப்பாவிடம் தான் கற்றுள்ளார். தொடர்ந்து இந்திய விளையாட்டு ஆணையத்தில் பயிற்சிக்கு இணைந்துள்ளார். 15 வயதில் இதே துருக்கியில் ஜூனியர் மற்றும் இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் ஃப்ளைவெயிட் பிரிவில் தங்கம் வென்றார்.
தொடர்ந்து தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்று வருகிறார். பிப்ரவரியில் நடைபெற்ற ஸ்ட்ராண்ட்ஜா நினைவு குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்று அசத்தி இருந்தார் நிகத். இப்போது மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
நிகத் ஜரீன் நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் இறுதிப் போட்டியில் தாய்லாந்து நாட்டின் ஜூடாமாஸ் ஜிட்பாங்கை எதிர்கொள்கிறார். இந்தியாவை சேர்ந்த மனிஷா மற்றும் பிரவீன் ஆகியோர் இந்த போட்டியில் வெண்கலம் வென்றுள்ளனர். தங்கம் வென்று வாருங்கள் என பலரும் நிகத் ஜரீனுக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.