மும்பை: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், நியூசிலாந்து நாட்டுக்குச் சென்றுள்ளார். கடைசி ஐபிஎல் லீக் போட்டியில் அவர் விளையாடாத சூழலில், அவருக்கு மாற்றாக அணியை வழிநடத்தப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
31 வயதான கேன் வில்லியம்சன், நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார். அவரது தலைமையிலான ஹைதராபாத் அணி, நடப்பு சீசனில் 13 போட்டிகளில் விளையாடி ஆறு வெற்றிகளை பதிவு செய்துள்ளது. தனது அணிக்காக இந்த சீசனில் 216 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் வில்லியம்சன்.
இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவி சாரா, விரைவில் குழந்தையை ஈன்றெடுப்பார் எனத் தெரிகிறது. இது அவர்களது இரண்டாவது குழந்தை. அதன் காரணமாக அவர் அணியை விட்டு விலகி, நியூசிலாந்து திரும்பியுள்ளார். வில்லியம்சன் - சாரா தம்பதியினருக்கு 2 வயதில் பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.
அவர் இல்லாத பட்சத்தில் அந்த அணி வரும் ஞாயிறு அன்று கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்தப் போட்டியில் அந்த அணியை வழிநடத்தப் போகும் வீரர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அனுபவ வீரர் புவனேஷ்வர் குமார், வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் மற்றும் தென்னாப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம் ஆகியோரது பெயர் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.