மும்பை: காயம் காரணமாக கொல்கத்தா வீரர் ரஹானே நடப்பு ஐபிஎல் சீசனில் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடாமல் விலகி உள்ளார். அவருக்கு அந்த அணி பிரியாவிடை கொடுத்துள்ளது.
பிப்ரவரியில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ரஹானேவை ரூ.1 கோடி வாங்கி இருந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இந்திய அணியின் சீனியர் வீரரை அடிப்படை தொகைக்கு அந்த அணி வாங்கி இருந்தது. நடப்பு சீசனில் அவர் மொத்தம் 7 போட்டிகளில் கொல்கத்தாவுக்காக விளையாடினார். அதன் மூலம் 133 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். இந்நிலையில், காயம் காரணமாக அவர் நடப்பு சீசனில் இருந்து விலகியுள்ளார். இதனை அந்த அணி அறிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, ஐபில் களத்தில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்காக ரஹானே விளையாடி உள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள காயத்தினால் இங்கிலாந்து பயணிக்க உள்ள இந்திய டெஸ்ட் அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் என தெரிகிறது.
அவருக்கு விடை கொடுக்கும் வீடியோவை கொல்கத்தா அணி பகிர்ந்துள்ளது. அதில் இந்த பயணத்தில் அணியுடன் நிறைய கற்றுக் கொண்டதாக ரஹானே தெரிவித்துள்ளார்.