மும்பை: ஐபிஎல் 64வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய டெல்லி அணிக்கு இன்றும் ஆல் ரவுண்டர் மிட்சேல் மார்ஷ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உதவினார். அவர் அரைசதம் கடந்து 63 ரன்கள் எடுத்து பங்களிப்பு செய்தார். அவருக்கு பக்க துணையாக சர்ப்ராஸ் கான் 32 ரன்களும், லலித் யாதவ் 24 ரன்களும் சேர்க்க டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் தரப்பில் லிவிங்ஸ்டோன் மற்றும் அர்ஷதீப் சிங் தலா மூன்று விக்கெட்கள் வீழ்த்தினர்.
எட்டக்கூடிய இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஓப்பனிங் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. ஜானி பேர்ஸ்டோவ் 28 ரன்களும், ஷிகர் தவான் 19 ரன்களும் எடுத்து வெளியேறினார். இவர்களுக்கு பின்னால் வந்த முக்கிய வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்கவில்லை. பனுகா ராஜபக்ச 4 ரன்கள், லிவிங்ஸ்டோன் 3 ரன்கள், கேப்டன் மயங்க் பூஜ்யம் என அடுத்தடுத்து வெளியேறினர்.
இதனால் நிலை தடுமாறிய பஞ்சாப் அணிக்கு விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா ஓரளவு கைகொடுத்தார். அவர் 44 ரன்கள் எடுக்க அணியின் ஸ்கோர் ஓரளவு உயர்ந்தது. ஆனால், அவருக்கு பக்கபலமாக இருக்க மற்ற வீரர்கள் தவறினர். இதனால், 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 142 ரன்கள் மட்டுமே சேர்த்து 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. டெல்லி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஷர்துல் தாகூர் நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார்.
இரு அணிகளுமே தலா 6 வெற்றிகளை பெற்றிருந்ததால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற இன்றைய போட்டி முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இதில் பஞ்சாப்பை வீழ்த்தி புள்ளி பட்டியலில் 4ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது டெல்லி அணி. இன்னும் ஒரு போட்டி அந்த அணிக்கு மீதம் இருக்கும் நிலையில் பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.