விளையாட்டு

IPL 2022 | அசத்தல் பவுலிங்கால் சரிந்த மிடில் ஆர்டர் - பஞ்சாப் கிங்ஸிடம் வீழ்ந்தது பெங்களூரு அணி

செய்திப்பிரிவு

ஐபிஎல் 60வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிகண்டுள்ளது பஞ்சாப் கிங்ஸ்.

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன. ஒவ்வொரு அணிகளும் பிளே ஆப் பட்டியலில் இடம்பிடிக்க போட்டி போட்டு வருகின்றன. இன்று 60வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பவுலிங் தேர்வு செய்ய, அதன்படி பஞ்சாப் அணி ஓப்பனிங் செய்தது. ஜானி பேட்ஸ்டோவ் மற்றும் ஷிகர் தவான் இருவரும் அதிரடியான துவக்கம் கொடுத்தனர். பவர் பிளே ஓவர்களை சரியாக பயன்படுத்திய இருவரும் 4வது ஓவரில் 50 ரன்கள் சேர்த்தனர்.

பேட்ஸ்டோவ் 66 ரன்கள் எடுத்தார். அதேபோல் ஆல் ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோன் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவரின் 70 ரன்கள் உதவியுடன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது. பெங்களூரு தரப்பில் ஹர்ஷல் படேல் நான்கு விக்கெட்டும், ஹஸரங்கா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணிக்கு கோலி, டு பிளசிஸ் அணி அதிரடியாக துவங்கினர். ஆனால் நீண்ட நேரம் இருவரும் நிலைக்க தவறினர். கோலி 20 ரன்களுக்கும், அவரை தொடர்ந்து டு பிளசிஸ் 10 ரன்களுக்கும் ஆட்டமிழந்து நடையை கட்டினர். மஹிபால் 6 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதன்பின் சில ஓவர்கள் மேக்ஸ்வெல் மற்றும் ரஜத் படிதார் இருவரும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால், இவர்கள் கூட்டணியை ராகுல் சஹார் பிரித்தார்.

3 பந்துகள் இடைவெளியில் ரஜத் படிதார் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதன்பின் வந்தவர்கள் யாரும் சோபிக்கவில்லை. சொற்ப ரன்களோடு சீரான இடைவெளியில் தங்கள் விக்கெட்டை இழந்தனர். இதனால், 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்து 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது பெங்களூரு. பஞ்சாப் தரப்பில் ரபடா 3 விக்கெட், ரிஷி தவான், ராகுல் சஹார் தலா இரண்டு விக்கெட் எடுத்து அணியின் வெற்றிக்கு கைகொடுத்தனர்.

SCROLL FOR NEXT