ஐபிஎல் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடாததே குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் பின்னடைவு கண்டதற்கு காரணம் என்று அந்த அணியின் புதிய பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.
இருநாடுகளுக்கு இடையிலான அரசியல் பதற்றம் காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்க முடியாமல் போயுள்ளது, இதனால் குறைந்த ஓவர் கிரிக்கெட் ஆட்டங்களில் பாகிஸ்தான் சரிவர விளையாடமுடியாமல் உள்ளது என்கிறார் அவர்.
பாகிஸ்தான் இணையதளம் ஒன்றில் அவர் இது பற்றி கூறியதாவது:
தனியார் கிரிக்கெட் அணிகளில் ஆடுவது, ஐபிஎல் போன்ற தொடர்களில் ஆடுவதால் நிறைய கற்றுக் கொள்ளலாம். இது ஒரு பெரிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாட முடியாமல் போனது பாகிஸ்தான் டி20 கிரிக்கெட்டை பாதித்துள்ளது.
தற்போதைய பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சு, ஸ்பின் பந்து வீச்சு இரண்டுமே சிறப்பாக உள்ளது. பாகிஸ்தான் தொடர்ந்து நல்ல வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கி வருகிறது, தொடர்ந்து உருவாக்கவே செய்யும். அதே போல் சுழற்பந்திலும் சிறந்து விளங்குவதால் வரும் தொடர்களில் பாகிஸ்தான் பக்கம் சாதகம் உள்ளது.
அதாவது, நன்றாக ஆடவேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துவதோடு கிரிக்கெட் ஆட்டத்தை வீரர்கள் மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும் என்பதே எனது குறிக்கோள். இப்படிப்பட்ட சூழலைத்தான் உருவாக்க விரும்புகிறேன்.
ஷாகித் அப்ரீடிக்கு இன்னமும் அணியில் பங்கு செலுத்தக்கூடிய வாய்ப்புள்ளது. ஆனால் இந்த விவாதத்திற்கு முன்பாக நிறைய கிரிக்கெட் போட்டிகள் வருகிறது அதில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு கூறினார் மிக்கி ஆர்தர்.