விளையாட்டு

IPL 2022 | டெல்லியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே

செய்திப்பிரிவு

மும்பை: டெல்லி கேபிடல்ஸ் அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

நடப்பு ஐபிஎல் சீசனின் 55-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த், பவுலிங் தேர்வு செய்தார். சென்னை அணி முதலில் பேட் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்தது 208 ரன்கள் எடுத்தது சிஎஸ்கே. 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது.

அந்த அணிக்காக டேவிட் வார்னர் மற்றும் கே.எஸ்.பரத் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இரண்டாவது ஓவரில் சிமர்ஜித் சிங் வேகத்தில் விக்கெட்டை இழந்தார் பரத். இருந்தாலும் அந்த அணிக்கு பேட்டிங்கில் அசத்தி வருபவர் வார்னர். அவர் 12 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்தார். இருந்தாலும் தீக்சனா வீசிய ஐந்தாவது ஓவரில் விக்கெட்டை இழந்தார்.

தொடர்ந்து ரிஷப் பந்த் மற்றும் மிட்செல் மார்ஷ், ஒரு குட்டி பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருந்தும் மொயின் அலி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார் மார்ஷ். பின்னர் சீரான இடைவெளியில் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது டெல்லி. பந்த், ரிபல் படேல், அக்சர் படேல், பவல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர் மற்றும் கலீல் அகமது ஆகியோர் அவுட்டாகினர். 17.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் எடுத்திருந்தது டெல்லி. அதன் பலனாக சென்னை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் இன்னிங்ஸ்

டேவான் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரர்களாக இறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 110 ரன்கள் சேர்த்தனர். ருதுராஜ் 41 ரன்களில் அவுட்டானார்.

தொடர்ந்து வந்த சிவம் துபே மற்றும் கான்வே, 59 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கான்வே 87 ரன்களில் அவுட்டானார். துபே, 32 ரன்கள் எடுத்து அவுட்டானார். ராயுடு, மொயின் அலி மற்றும் உத்தப்பா ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி இருந்தனர். கேப்டன் தோனி 8 பந்துகளில் 21 ரன்கள் எடுத்திருந்தார். இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றார் டேவான் கான்வே.

இந்த போட்டி நடைபெறுவதில் சிக்கல் இருந்தது. ஏனெனில் டெல்லி அணியில் சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருந்த காரணத்தால் அந்த அணி தனிமைப்படுத்தப்பட்டு இருந்தது. தொற்று பாதிப்பு ஏதும் இல்லை என்பது உறுதியான பிறகே போட்டி நடந்தது. இதுகுறித்து போட்டி முடிந்தது டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் பேசி இருந்தார்.

SCROLL FOR NEXT