மும்பை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக், 8 பந்துகளில் 30 ரன்களை சேர்த்து அசத்தினார். அவரது ஆட்டத்தை பார்த்தது அவருக்கு முன் தலைவணங்கினார் விராட் கோலி.
நடப்பு ஐபிஎல் சீசனின் 54-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஆர்சிபி அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்து வெற்றி பெற்றுள்ளது ஆர்சிபி. அந்த அணியின் வெற்றிக்கு அடிப்படை காரணமாக அமைந்தது டூப்ளசி, ரஜத் பட்டிதர், மேக்ஸ்வெல் மற்றும் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம். அதன் பலனாக அந்த அணி 192 ரன்கள் குவித்தது. அதோடு இந்த போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆர்சிபி.
இதில் தினேஷ் கார்த்திக் வெறும் 8 பந்துகளில் 30 ரன்களை குவித்தார். அவரது இன்னிங்சில் 4 சிக்சர்கள் மற்றும் 1 பவுண்டரி விளாசி இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 375. நடப்பு சீசனில் 12 போட்டிகள் விளையாடி 274 ரன்கள் எடுத்துள்ளார் அவர். இந்த போட்டியில் கடைசி ஓவரின் கடைசி நான்கு பந்துகளில் மூன்று சிக்சர்கள் மற்றும் 1 பவுண்டரி விளாசினார் அவர்.
முதல் இன்னிங்ஸ் முடிந்து டிரெஸ்ஸிங் ரூம் திரும்பினார் தினேஷ் கார்த்திக். அப்போது அவருக்கு முன்பு வந்து தலை வணங்கி பாராட்டி இருந்தார் விராட் கோலி. அதோடு பெங்களூரு அணியின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களும் தினேஷ் கார்த்திக்கின் அற்புதமான ஆட்டத்தை பாராட்டி இருந்தனர்.