விளையாட்டு

IPL 2022 | ஜானி பேர்ஸ்டோ நிதான ஆட்டம் - ராஜஸ்தான் அணிக்கு 190 ரன்கள் இலக்கு

செய்திப்பிரிவு

மும்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 189 ரன்களை குவித்தது.

15-வது ஐபிஎல் சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்றைய 52-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி, பஞ்சாப் அணிக்கு ஜானி பேர்ஸ்டோவ், ஷிகர் தவான் இணை துவக்கம் கொடுத்தது. இருவரும் இணைந்து அணிக்கு நல்லதொரு தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஆனால், இந்த இணையை 5-வது ஓவரில் ரவிசந்திரன் அஸ்வின் பிரித்தார். கேட்ச் கொடுத்து அவுட்டாகி 12 ரன்களில் நடையைக் கட்டினார் தவான்.

அடுத்து வந்த பானுகா ராஜபக்ச 27 ரன்களில் சாஹல் பந்தில் போல்டானார். மயங்க் அகர்வாலும் 15 ரன்களில் கிளம்ப, ஒருபுறம் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜானி பேர்ஸ்டோவை 56 ரன்களில் வெளியேற்றினார் சாஹல்.

இதனையடுத்து 15 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 122 ரன்களை சேர்த்திருந்தது. இரண்டு சிக்ஸர்களுடன் அதிரடியாக ஆடி வந்த லியாம் லிவிங்ஸ்டன், 22 ரன்களில் விக்கெட்டானார்.

இதைத் தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 189 ரன்களை குவித்தது. ஜித்தேஷ் ஷர்மா 38 ரன்களுடனும், ரிஷி தவான் 5 ரன்களுடனும் பேட்ஸ்மேன்களாக களத்தில் உள்ளனர்.

ராஜஸ்தான் அணி தரப்பில் சாஹல் 3 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின், பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

SCROLL FOR NEXT