மும்பை: ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக பந்து வீசிய டாப் ஐந்து பவுலர்கள் யார் என பார்ப்போம். இந்தப் பட்டியலில் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் இடம்பெற்றுள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் போட்டிக்கு போட்டி தனது பந்துவீச்சில் வேகத்தை கூட்டி வருகிறார் உம்ரான் மாலிக். ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 22 வயதான அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த சீசனில் தனது வேகத்தை லேசாக வெளிப்படுத்தி இருந்தார். அதன் பலனாக அவர் அந்த அணியில் தக்க வைக்கப்பட்டார். நடப்பு சீசனில் அவர் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் அதிவேகமாக பந்து வீசிய பவுலருக்கான விருதை வென்று வருகிறார்.
டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற நடப்பு சீசனின் 50-வது லீக் போட்டியில் காற்றை கிழித்த படி மணிக்கு 157 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி இருந்தார் உம்ரான். நடப்பு சீசனில் இது தான் ஒரு பவுலர் அதிவேகமாக வீசிய டெலிவரியாக உள்ளது. சராசரியாக மணிக்கு 150+ கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி வருகிறார் அவர். ஐபிஎல் களத்தில் அக்தர், ஸ்டெயின், ஜோஃப்ரா ஆர்ச்சர் என வேகத்தில் அசத்தியவர்கள் பலர் விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிவேகமாக பந்து வீசிய டாப் ஐந்து பவுலர்கள்:
> ஷான் டைட் - மணிக்கு 157.7 கிலோமீட்டர் வேகம் - ராஜஸ்தான் ராயல்ஸ்
> உம்ரான் மாலிக் - மணிக்கு 157 கிலோமீட்டர் வேகம் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
> ஆன்ரிச் நோர்க்யா - மணிக்கு 156.22 கிலோமீட்டர் வேகம் - டெல்லி கேபிடல்ஸ்
> உம்ரான் மாலிக் - மணிக்கு 155.60 கிலோமீட்டர் வேகம் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
> ஆன்ரிச் நோர்க்யா - மணிக்கு 155.2 கிலோமீட்டர் வேகம் - டெல்லி கேபிடல்ஸ்