மும்பை: "2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோனி சார் அடித்த சிக்ஸர் தான் இந்தியாவுக்காக நான் விளையாட வேண்டுமென்ற இன்ஸ்பிரேஷனை எனக்கு கொடுத்து" எனத் தெரிவித்துள்ளார் சிஎஸ்கே பவுலர் முகேஷ் சவுத்ரி.
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் யூனிட்டில் ஒரு பவுலராக விளையாடி வருகிறார் முகேஷ் சவுத்ரி. 25 வயதான அவர் மகாராஷ்டிரா அணிக்காக டொமஸ்டிக் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அவரை, அடிப்படை விலையான 20 லட்ச ரூபாய்க்கு கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற மெகா ஏலத்தில் வாங்கியிருந்தது சிஎஸ்கே. நடப்பு சீசனில் 8 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் முகேஷ்.
வில்லியம்சன், விராட் கோலி, ரோகித் சர்மா, இஷான் கிஷன், கில் என தரமான பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் முகேஷ். கடைசியாக ஹைதராபாத் அணிக்கு எதிராக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் அவர். இந்நிலையில், இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவு தனக்கு வர காரணமே தோனியின் ஆட்டம்தான் என்று அவர் சொல்லியுள்ளார்.
"இந்தியாவின் வெற்றிக்காக தோனி சார் விளாசிய அந்த சிக்ஸரை பார்க்கும் போதெல்லாம் எனது உடம்புக்குள் சிலிர்ப்பு ஏற்படும். எதிர்முனையில் நின்றிருந்த யுவராஜ் சிங்கை, தோனி கட்டி அணைத்து வெற்றியைக் கொண்டாடியிருப்பார். அந்த நொடியே இந்தியாவுக்காக நாமும் ஒருநாள் விளையாட வேண்டுமென நான் முடிவு செய்தேன். அதற்கு முன்பும் நான் கிரிக்கெட் விளையாடி வந்தேன். ஆனால் அதன் பிறகு எனது ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தினேன். அந்த வெற்றி குறித்து தோனி சாருடன் பேசி இருந்தேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சரியாக விளையாடாத போது சிஎஸ்கே அணியின் பவுலர் தீபக் சாஹர் பாய் (சகோதரர்) உடன் பேசி, அவரது ஆலோசனைகளை பெற்றதாகவும் சவுத்ரி தெரிவித்துள்ளார்.