மும்பை : டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 45-வது லீக் ஆட்டத்தின் இன்றைய போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல், குயிண்டன் டி காக் களம் இறங்கினர். அணியின் ஸ்கோர் 42 ஆக இருந்தபோது டி காக் 23 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து இறங்கிய தீபக் ஹூடா கேப்டன் ராகுலுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் அணியின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. இருவரும் சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரை சதம் கடந்தனர். தீபக் ஹூடா 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய கே.எல்.ராகுல் 77 ரன்னில் வெளியேறினார். இறுதியில், லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 195 ரன்களை எடுத்தது. டெல்லி அணி சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட் கைப்பற்றினார்.
196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு டேவிட் வார்னர், பிரித்வி ஷா இணை தொடக்கம் கொடுத்தது. டெல்லி அணிக்கு மோசமான தொடக்கமாக இது அமைத்தது. முதல் ஓவரிலேயே பிரித்வி ஷா 5 ரன்களுடன் வெளியேறினார். அடுத்து ஓவரில் வார்னரும் 3 ரன்களுடன் நடையைக் கட்டினார். மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் கைகோர்த்தனர். ஆனால், மிட்செல் மார்ஷ் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 37 ரன்களுடன் 7-வது ஓவரில் வெளியேறினார்.
லலித் யாதவ் 3 ரன்களுடன் விக்கெட்டனார். நிலைத்து நின்று ஆடிய ரிஷப் பண்டை 44 ரன்களில் போல்டாக்கி வெளியேற்றினார் மோசின்கான். ஷர்துல் தாக்கூர் 1 ரன்களிலும், 35 ரன்களில் ரோவ்மேன் பவலும் விக்கெட்டாகினர். வீரர்கள் நிலைக்காததால் டெல்லி அணியால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.
லக்னோ அணி தரப்பில் மொஹ்சின் கான் 4 விக்கெட்டையும், ரவி பிஷ்னோய், கிருஷ்ணப்பா கௌதம், துஷ்மந்தா சமீரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.