பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, தனது சுயசரிதையை புத்தகமாக எழுதி வருகிறார். இப்புத்தகம் வரும் ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ளது.
இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, தனது தந்தை இம்ரான் மிர்சாவுடன் இணைந்து ‘ஏஸ் அகெயின்ஸ்ட் ஆட்ஸ்’ (Ace Against Odds) என்ற பெயரில் தனது சுயசரிதையை புத்தகமாக எழுதிவருகிறார். சாதாரண பெண்ணாக இருந்து இரட்டையர் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக முன்னேறியது பற்றியும். இந்த பயணத்தில் தான் எதிர் கொண்ட சவால்கள் பற்றியும் சானியா மிர்சா இப்புத்தகத்தில் எழுதுகிறார். ஹார்ப்பர் காலின்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ள இப்புத்தகம் ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ளது.
இந்த புத்தகத்தைப் பற்றி கூறும் சானியா மிர்சா, “இளம் தலைமுறை டென்னிஸ் வீரர்களுக்கு இப்புத்தகம் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய புத்தகம் எந்தவொரு இந்திய வீரரையாவது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்லத் தூண்டுமானால் நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.