மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்துள்ளார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி.
குஜராத் மற்றும் பெங்களுரு அணிகள் நடப்பு சீசனின் 43-வது லீக் ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்களை எடுத்தது. அந்த அணி கடந்த சில போட்டிகளாக பேட்டிங்கில் சொதப்பி வருகிறது. இந்தப் போட்டியில் அதற்கு தீர்வு காணும் வகையில் அமைந்தது விராட் கோலியின் ஆட்டம்.
41*, 12, 5, 48, 1, 12, 0, 0, 9 இது தான் விராட் கோலி நடப்பு சீசனில் இதற்கு முன்னர் விளையாடிய போட்டிகளில் எடுத்திருந்த ரன்களாகும். அவரது மோசமான பேட்டிங் ஃபார்ம் குறித்து பல்வேறு விதமான பேச்சுகள் இருந்து வந்தன. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி, 'கோலி நிச்சயம் ஃபார்முக்கு திரும்புவார்' என தெரிவித்திருந்தார். அவர் சொன்னது பலித்துள்ளது.
இன்றைய போட்டியில் 53 பந்துகளில் 58 ரன்களை எடுத்தார் அவர். முதல் இன்னிங்ஸின் 13-வது ஓவரில் அரை சதம் பதிவு செய்தார் கோலி. அவரது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா போட்டியை நேரில் காண மைதானத்திற்கு வந்திருந்தார். கோலி அரைசதம் பதிவு செய்ததும் அவர் ஆரவாரம் செய்து கொண்டாடினார். அந்த வீடியோ தற்போது கவனம் ஈர்க்கப்பட்டு வருகிறது. கோலி - அனுஷ்கா தம்பதியினருக்கு வாமிகா என்ற பெண் குழந்தை உள்ளார்.