விளையாட்டு

கொல்கத்தாவை வீழ்த்திய சன்ரைசர்ஸ்: பவுலர்களுக்கு கேப்டன் வார்னர் பாராட்டு

பிடிஐ

நேற்று நடைபெற்ற ஐபிஎல் பிளே ஆஃப் போட்டியில் சன் ரைசர்ஸ் அணி தனது அருமையான பவுலிங், பீல்டிங்கினால் கொல்கத்தாவை 140 ரன்களுக்கு மட்டுப்படுத்தி வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் அணியில் யுவராஜ் சிங் 30 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 44 ரன்களை அதிகபட்சமாக எடுக்க 20 ஒவர்களில் 162 ரன்கள் எடுத்தது அந்த அணி. சைனமன் பவுலர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து ஆடிய கொல்கத்தா புவனேஷ் குமார், முஸ்தபிசுர் ரஹ்மான், மோய்சஸ் ஹென்ரிக்ஸ், கட்டிங் ஆகியோரது அருமையான பந்து வீச்சுக்கு விடையில்லாமல் 20 ஓவர்களில் 140 ரன்களையே எடுத்து வெளியேறியது. கேப்டன் கம்பீர் 28 பந்துகளில் 28 ரன்களையே எடுத்தார். வழக்கமாக இவர் உத்தபாவுடன் இணைந்து நல்ல ஸ்கோர்களை இந்த ஐபிஎல் தொடரில் எட்டினர், ஆனால் நேற்று உத்தப்பா 11 ரன்களில் வெளியேறினார். புவனேஷ் குமார் 4 ஓவர்களில் 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தற்போது குஜராத் லயன்ஸை வீழ்த்தினால் சன் ரைசர்ஸ் இறுதிப்போட்டியில் பெங்களூருடன் மோதலாம்.

இந்நிலையில் டேவிட் வார்னர் கூறியதாவது:

பந்துவீச்சாளர்கள் அருமையான அணுகுமுறையை வெளிப்படுத்தினர். காயமடைந்த ஆஷிஷ் நெஹ்ராவின் அனுபவத்தை மிக மோசமாக இழந்தோம். அவரது அனுபவத்துக்கு ஈடு இணை கிடையாது. ஆனால் மற்ற வீச்சாளர்கள் அவர் இடத்தை நன்றாக பூர்த்தி செய்தனர். பரீந்தர் சரண் அருமையாக வீசுகிறார். அவர் இன்னமும் கற்றுக் கொண்டிருக்கிறார், புவனேஷ் குமார் அவருக்கு நாள் முழுதும் உதவுகிறார். அனைவரும் கற்றுக் கொள்ள விரும்புவதுதான் இந்த அணியின் மிகப்பெரிய விஷயமாகும்.

என்னைப் பொறுத்தவரையில் எனக்கு மகிழ்ச்சி அளித்தது அணியின் பீல்டிங்தான். இந்தத் தொடர் முழுதும் பீல்டிங்கில் நாங்கள் சிறந்து விளங்கவில்லை. ஆனால் சிறந்த கேட்ச்களை இந்தப் போட்டியில் பிடித்தனர். தரை பீல்டிங்கும் அபாரமாக இருந்தது.

பேட்டிங்கில் நாங்கள் 10-15 ரன்கள் குறைவாக எடுத்திருந்தோம், டாஸ் வென்று முதலில் பேட் செய்வதா, பீல்ட் செய்வதா என்று நான் தடுமாறினேன். ஆனால் இங்கு விளையாடியதை வைத்து பார்த்த போது, ஓரளவுக்கு நல்ல ஸ்கோரை எடுத்து எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தால் கடினமாக அமைவதை உணர்ந்திருக்கிறேன். அதனால்தான் முதலில் பேட் செய்தோம்.

விக்கெட்டுகளை கொத்தாக விடுவது பற்றி நாங்கள் விவாதித்தோம், குறிப்பாக நான் அவுட் ஆன விதம் எனக்கு ஏமாற்றமளித்தது. பந்துகள் திரும்பும் பிட்சில் குல்திப் யாதவ் நன்றாக வீசினார். ஆனால் யுவராஜ் போன்ற அனுபவ வீரருக்கு இளம் வீச்சாளர் வந்து திடீரென வீசுவது கடினமே. ஆனால் குல்தீப் யாதவ் வரும் காலங்களில் சிறந்த ஸ்பின்னராக வளர்ச்சியடைவார் என்பது உறுதி.

குஜராத் லயன்ஸ் அணியின் முக்கிய வீரர்களைக் கவனித்து வருகிறோம், டிவைன் ஸ்மித் அருமையாக ஆடி வருகிறார். அந்த அணியின் தொடக்க வீரர்கள் நிச்சயம் எங்கள் பவுலர்களை பதம்பார்க்கும் முடிவுடன் இறங்குவர் என்று கருதுகிறேன். ஒரு அணியாக நன்றாகத் தொடங்குவது அவசியம். எங்கள் திட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

இவ்வாறு கூறினார் வார்னர்.

SCROLL FOR NEXT