மும்பை: பெங்களூரு அணிக்காக பொறுப்புடன் விளையாடினர் விராட் கோலி மற்றும் ரஜத் பட்டிதார். அவர்களது அசத்தல் கூட்டணி காரணமாக குஜராத் அணிக்கு 171 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ஆர்சிபி.
நடப்பு ஐபிஎல் சீசனின் 43-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மாற்று குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டூப்ளசி, பேட்டிங் தேர்வு செய்தார். பெங்களூரு அணிக்காக விராட் கோலி மற்றும் டூப்ளசி தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரன் எதுவும் எடுக்காமல் இரண்டாவது ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார் டூப்ளசி.
தொடர்ந்து வந்த ரஜத் பட்டிதார் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார் கோலி. இருவரும் 99 ரன்களுக்கு விக்கெட்டை இழக்காமல் நிதானமாக விளையாடினர். இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்து அசத்தினர். இந்த அரைசதம் மூலம் கோலி தனது மோசமான ஃபார்மில் இருந்து மீண்டு வந்துள்ளார். 32 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அவுட்டானார் . 53 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து அவுட்டானார் கோலி.
பின்னர் வந்த மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடினார். முதல் பந்து முதலே அதற்கான முனைப்பை காட்டியிருந்தார் மேக்ஸ்வெல். 18 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து அவுட்டானார் அவர். தினேஷ் கார்த்திக் 2 ரன்களில் விக்கெட்டை இழந்தார். லோம்ரோர் 8 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து அவுட்டானார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது பெங்களூரு.
குஜராத் அணி சார்பில் பிரதீப் சங்வான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷமி, ரஷீத் கான், ஃபெர்குசன் மற்றும் அல்சாரி ஜோசப் தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர். தற்போது குஜராத் அணி 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டி வருகிறது.