புதுடெல்லி: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கை புகழ்ந்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம்.
நடப்பு ஐபிஎல் சீசனில் அதிவேகமாக பந்துவீசி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தி வருகிறார் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக். அவர் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு சீசனில் இதுவரை மொத்தம் 8 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். மணிக்கு சராசரியாக 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பந்து வீசி வருகிறார் உம்ரான்.
அதன் காரணமாக இந்நாள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள் எனப் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரமும் இளம் வீரர் உம்ரான் மாலிக்கை பாராட்டியுள்ளார் .
"உம்ரான் மாலிக் எனும் சூறாவளி தனது பாதையில் குறுக்கிடும் அனைத்தையும் துவம்சம் செய்கிறது. என்னவொரு வேகம். என்னவொரு ஆக்ரோஷம். நடப்பு ஐபிஎல் சீசன் மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ள முத்தான சிறந்த வீரர் அவர் தான் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.
இந்திய கிரிக்கெட் வாரியம் அவருக்கு சிறப்புப் பயிற்சி கொடுத்து, கூடிய விரைவில் தேசிய அணியிலும் அவரை சேர்க்க வேண்டும்" என ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம்.
முன்னதாக, இங்கிலாந்து நாட்டுக்கு செல்லவுள்ள இந்திய டெஸ்ட் அணியில் உம்ரானை சேர்க்க வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூரும் சொல்லி இருந்தார். இருப்பினும் இதனை கவனித்த நெட்டிசன்கள் கலவையான ரியாக்ஷன்களை கொடுத்திருந்தனர்.