லண்டன்: இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இதனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அண்மையில் விலகினார் ஜோ ரூட். அதையடுத்து அந்த அணியை வழிநடத்த போகும் புதிய கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. நியூசிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுடன் வரும் ஜூன் முதல் ஜூலை வரையில் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் விளையாட உள்ளதே இதற்குக் காரணம். இந்நிலையில், தற்போது அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
30 வயதான ஸ்டோக்ஸ் கடந்த 2013 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்ல காரணமானவர்களில் ஒருவர் இவர். இதுவரை மொத்தம் 79 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 5061 ரன்கள் எடுத்துள்ளார்; 174 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் டாப் 10 ஆல்-ரவுண்டர்களில் ஐந்தாவது இடத்தில் உள்ளவர். ரூட் தலைமையிலான அணியின் துணை கேப்டனாக விளையாடியவர்.
இடையில் சில காலம் ஓய்வு வேண்டி கிரிக்கெட் விளையாட்டில் இருந்து தள்ளியிருந்தார். பின்னர் மீண்டும் கம்பேக் கொடுத்தார். இப்போது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தும் நோக்கில் நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து விலகி இருக்கப்போவதாக முன்கூட்டியே தெரிவித்திருந்தார் ஸ்டோக்ஸ்.