விளையாட்டு

IPL 2022 | இந்திய விளையாட்டு வீரர்களின் நலனுக்காக ஜெர்சியை ஏலம் விட்டு நிதி திரட்டும் டெல்லி அணி

செய்திப்பிரிவு

மும்பை: இந்திய நாட்டின் விளையாட்டு வீரர்களின் நலனுக்காக ஜெர்சியை ஏலம் விட்டு, அதன் மூலம் நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது டெல்லி கேபிடல்ஸ் கிரிக்கெட் அணி.

நடப்பு ஐபிஎல் சீசனில் மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி. நோ-பால் சர்ச்சை, கரோனா பரவல் என அசாதாரண சூழலை கடந்து வந்துள்ளது டெல்லி அணி. லீக் போட்டிகளின் இரண்டாவது பாதியில் தங்களது அணி ஆதிக்கத்தை செலுத்தும் என தெரிவித்துள்ளார் அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பான்டிங். இந்நிலையில், விளையாட்டு வீரர்களின் நலனுக்காக நிதி திரட்டுகிறது டெல்லி.

இதற்காக நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்கு எதிரான போட்டியில் டெல்லி வீரர்கள் அணிந்து விளையாடும் ஜெர்சியை ஏலம் விடுவதாக தெரிவித்துள்ளது அந்த அணி. இதனை #MatchWornShirt மூலம் மேற்கொள்கிறது டெல்லி அணி. வீரர்களின் ஜெர்சியை அதிக விலைக்கு ஏலம் கேட்கும் நபர்கள் அல்லது ரசிகர்களுக்கு சம்பந்தப்பட்ட வீரர்களின் ஆட்டோகிராஃப் உடன் ஜெர்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் திரட்டப்படும் நிதியை இன்ஸ்பயர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் (IIS) விஜயநகர் பயிற்சி கூடத்தில் பயிற்சி பெற்று வரும் வீரர்களுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி அணியின் தன்வசம் வைத்துள்ள ஜே.எஸ்.டபிள்யூ நிர்வாகம் இந்தப் பயிற்சி கூடத்தை நடத்தி வருகிறது. இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி கொடுத்து வரும் தனியார் பயிற்சி மையம் இது. இதற்கு இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அங்கீகாரமும் வழங்கியுள்ளது. தடகளம், குத்துச்சண்டை, ஜூடோ, நீச்சல் மற்றும் மல்யுத்த விளையாட்டு வீரர்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது ஐஐஎஸ்.

SCROLL FOR NEXT