விளையாட்டு

IPL 2022 | CSK vs PBKS: மீண்டும் தோனி, மீண்டும் கடைசிநேர த்ரில்.. பஞ்சாப்பிடம் வீழ்ந்த சென்னை அணி

செய்திப்பிரிவு

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியுள்ளது.

188 ரன்கள் இலக்கை நோக்கி இன்னிங்ஸை துவக்கிய சென்னை அணிக்கு ஓப்பனிங் ஜோடி இந்தமுறையும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இரண்டாவது ஓவரிலேயே உத்தப்பா ஒரு ரன்னோடு பெவிலியனுக்கு நடையை கட்டினார். அடுத்தடுத்து இறங்கிய சான்டனர், ஷிவம் துபே ஒற்றை இலக்க ரன்களோடு வெளியேறினர். பின்னர் ருதுராஜ் கெய்க்வாடும் அம்பதி ராயுடுவும் கூட்டணி சேர்ந்தனர்.

வழக்கத்துக்கு மாறாக, அம்பதி ராயுடு இன்று வந்தது முதலே அதிரடியாக விளையாடினார். ஓப்பனர் ருதுராஜ் கெய்க்வாட் 30 ரன்கள் எடுக்கும் முன்னதாக, ராயுடு 30 ரன்களை தாண்டி சேர்த்தார். சிறிதுநேரத்தில் கெய்க்வாட் 30 ரன்களில் ஆட்டமிழக்க, ராயுடு ஒற்றை நபராக பஞ்சாப் பந்துவீச்சை துவம்சம் செய்தார். 6 சிக்ஸர்களை விலகிய அவர், குறிப்பாக சந்தீப் சர்மா வீசிய 16வது ஓவரில் மட்டும் ஹாட்ரிக் சிக்ஸ் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து ருத்தரதாண்டவம் ஆடினார். எனினும், ரபாடா வீசிய 18வது ஓவரில் யார்க்கர் பந்தில் போல்டாகி 78 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

12 பந்துகளில் 35 ரன்கள் தேவைப்பட்ட போது தோனி களம் புகுந்தார். இதனால் ஆட்டத்தில் சுவாரஸ்யம் கூடியது. கடந்த போட்டியில் இறுதி ஓவரில் அணியை வெற்றிபெற வைத்த அவர் மீது எதிர்பார்ப்பு கூடியது. அதற்கேற்ப 19வது ஓவரில் தோனி ஒரு பவுண்டரி அடிக்க, கடைசி 6 பந்துகளில் 27 ரன்கள் தேவைப்பட, ரிஷி தவான் வீசிய முதல் பந்தை சிக்ஸராக பறக்கவிட்ட அவர், மூன்றாவது பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று கேட்ச் மூலம் அவுட் ஆனார்.

தோனி 12 ரன்களில் வெளியேறியதும் பஞ்சாப் ரசிகர்கள் மற்றும் அணியினர் நிம்மதி அடைந்தனர். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்களை இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இறுதிவரை அவுட் ஆகாமல் இருந்த ஜடேஜா 21 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் ரபாடா, ரிஷி தவான் தலா இரண்டு விக்கெட்கள் எடுத்தனர்.

பஞ்சாப் கிங்ஸ் இன்னிங்ஸ்: டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஜடேஜா, பவுலிங் தேர்வு செய்தார். பஞ்சாப் அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் மற்றும் ஷிகர் தவான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மயங்க், 21 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து பனுகா ராஜபக்சே பேட் செய்ய வந்தார்.

தவான் மற்றும் ராஜபக்சே இணை 110 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கடந்த சில போட்டிகளாக இது மாதிரியான ஒரு பார்ட்னர்ஷிப்பை அமைக்க முடியாமல்தான் தடுமாறி வந்தது பஞ்சாப். ராஜபக்சே 32 பந்துகளை எதிர்கொண்டு 42 ரன்கள் எடுத்து அவுட்டானார். மறுமுனையில் விளையாடிய தவான் 59 பந்துகளில் 88 ரன்கள் எடுத்தார். இறுதி வரை அவர் அவுட்டாகாமல் விளையாடினார். அதோடு ஐபிஎல் கிரிக்கெட்டில் 6,000 ரன்களை கடந்த இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற மைல்கல்லை அவர் எட்டியுள்ளார்.

லிவிங்ஸ்டன், தன் பங்கிற்கு 7 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்தார். டெத் ஓவர்களில் சென்னை பவுலர்களை தனது பேட்டிங் மூலம் மிரட்டினார் அவர். பேர்ஸ்டோ 6 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணி. சென்னை இந்தப் போட்டியில் வெற்றி பெற 188 ரன்கள் தேவை. சென்னை அணியில் பிராவோ (2), தீக்சனா (1) விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.

SCROLL FOR NEXT