மும்பை: டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரன்களை குவித்தது. ஜாஸ் பட்லர் தனி ஆளாக 65 பந்துகளில் 116 ரன்களை குவித்து அதிரடி காட்டினார்.
ஐபிஎல் 15-வது சீசன் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்றைய 34-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியும், டெல்லி அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, ராஜஸ்தான் அணிக்கு ஜாஸ்பட்லர், தேவ்தட் படிக்கல் இணை தொடக்கம் கொடுத்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணையை பிரிக்க முடியாமல் டெல்லி பந்துவீச்சாளர்கள் தடுமாறினர்.
இருவரும் பாட்னர்ஷிப் அமைத்து 155 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினர். இதனையடுத்து 35 பந்துகளில் 54 ரன்களை சேர்த்த தேவ்தட் படிக்கலை 16-வது ஓவரில் கலீல் அஹமது வெளியேற்றினார். அவரைத் தொடர்ந்து களத்துக்கு வந்த சஞ்சு சாம்சன் பட்லருடன் கைகோர்த்தார். இருவரும் இணைந்து டெல்லி பந்து வீச்சாளர்களின் பந்துகளை நாலாப்புறமும் சிதறடித்தனர். 65 பந்துகளில் 116 ரன்களை குவித்த பட்லர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் வீசிய 19-வது ஓவரில் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்களை குவித்தது. டெல்லி அணி தரப்பில் கலீல் அஹமது, முஸ்தஃபிசூர் ரஹ்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.