டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பவுன்சர் ஹெல்மெட்டை தாக்கியது லாரி மோதியதை போன்று இருந்ததாக புனே வீரர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்தார்.
விசாகப்பட்டினத்தில் நேற்று டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் சக ஆஸ்திரேலியா வீரர் நாதன் கோல்ட்டர் நைல் வீசிய பந்தை பெய்லி அடிக்க முயன்றார். பந்து மட்டையின் விளிம்பில் பட்டு ஹெல்மெட்டை கடுமையாக தாக்கியது. உடனே ஹெல்மெட் ஸ்டெம்பு அருகே கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பெய்லிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
இதுகுறித்து பெய்லி கூறும்போது, " நான் டிவி ரீபிளேயில் பார்த்த போது தான் பந்து எந்த அளவுக்கு தாக்கியது என்பது தெளிவாக தெரிந்தது. பந்து ஹெல்மட்டை தாக்கியதும் நான் நிலை குலைந்தேன். முகத்தில் லாரி மோதியது போன்று உணர்ந்தேன். உடனடியாக அதில் இருந்து மீண்டு, சகஜ நிலைக்கு திரும்பினேன். தொடர்ந்து வேறு ஹெல்மட்டை அணிந்து விளையாடினேன்" என்றார்.
ஆனால் இந்த ஹெல்மெட் ஸ்டம்பைத் தாக்காதது சிலருக்கு ஏமாற்றமாகவும் இருந்தது என்று நகைச்சுவையுடன் கூறிய பெய்லி, “ஹெல்மெட் பறந்து ஸ்டம்பின் மேல் விழவில்லை என்பது ஒரு சில வீரர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது” என்றார்.
இந்தப் போட்டியில் புனே வெற்றி பெற்றதையடுத்து டெல்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் சற்று சிக்கல் ஏற்பட்டுள்ளது.