ரோகித் மற்றும் பும்ரா (கோப்புப்படம்) 
விளையாட்டு

ரோகித், பும்ரா உட்பட சிறந்த 5 கிரிக்கெட் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது விஸ்டன் 

செய்திப்பிரிவு

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பவுலர் பும்ரா உட்பட உலகின் சிறந்த ஐந்து கிரிக்கெட் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது விஸ்டன். இது 2022 எடிஷனுக்கான அறிவிப்பாகும்.

'கிரிக்கெட் உலகின் பைபிள்' என போற்றப்படுகிறது லண்டனிலிருந்து ஆண்டுதோறும் வெளியிடப்படும் கிரிக்கெட் ரெஃபரன்ஸ் புத்தகமான விஸ்டன். இதில் ஆண்டுதோறும் சிறந்த ஐந்து கிரிக்கெட் வீரர்கள் குறித்த விவரமும் வெளியிடப்படும். 1889 முதல் இதனை விஸ்டன் அறிவித்து வருகிறது. அந்த வகையில் நடப்பு 2022 எடிஷனுக்கான சிறந்த ஐந்து கிரிக்கெட் வீரர்கள் யார் என்பதை விஸ்டன் அறிவித்துள்ளது. இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு இந்த பட்டியலில் முன்னுரிமை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த முறை இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இந்திய பவுலர் பும்ரா ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்திய அணியின் 2021 இங்கிலாந்து சுற்றுப்பயணம் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் என இங்கிலாந்தில் இந்திய அணி கிரிக்கெட் விளையாடி இருந்தது. ரோகித், நான்கு டெஸ்ட் போட்டிகளில் 368 ரன்கள் சேர்த்திருந்தார். அவரது பேட்டிங் சராசரி 52.57 ரன்கள்.

அதே போல பும்ரா, இங்கிலாந்து அணிக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகளில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். இவர்களை தவிர நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே, இங்கிலாந்து வீரர் ராபின்சன், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீராங்கனை டேன் வான் நீக்கெர்க் ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

தலைசிறந்த டி20 கிரிக்கெட் வீரராக பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானை அறிவித்துள்ளது விஸ்டன். அதே போல 2022 எடிஷனின் சிறந்த வீரராக இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அறிவிக்கப்பட்டுள்ளார். மகளிர் பிரிவில் தென்னாப்பிரிக்காவின் லிசெல் லீ அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக இந்தப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுனில் கவாஸ்கர், கபில்தேவ், திலீப் வெங்சர்கார், அனில் கும்ப்ளே, சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், வி.வி.எஸ்.லக்‌ஷ்மணன், ஜாஹீர் கான், ஷிகர் தவான், விராட் கோலி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

SCROLL FOR NEXT