சுரேஷ் ரெய்னா (கோப்புப்படம்). 
விளையாட்டு

IPL 2022 | 'என் வாழ்க்கையில் சுரேஷ் ரெய்னா  கடவுளைப் போல நுழைந்தார்' - நெகிழும் இளம் பவுலர்

செய்திப்பிரிவு

மும்பை: என் வாழ்க்கையில் இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, கடவுளைப் போல நுழைந்தார் எனத் தெரிவித்துள்ளார் நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடி வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இளம் பவுலர் ஒருவர்.

'மிஸ்டர்.ஐபிஎல்', 'தளபதி' என்றெல்லாம் போற்றப்படுபவர் முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா. இருந்தாலும் நடப்பு சீசனில் அவரை எந்தவொரு அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. அதன் காரணமாக அவர் வர்ணனையாளர் பணியை கவனித்து வருகிறார். இந்நிலையில் அவரால் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் குறித்துப் பேசியுள்ளார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பவுலர் கார்த்திக் தியாகி.

21 வயதான அவர் கடந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி இருந்தார். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 4 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட, அந்த ஓவரை அபாரமாக வீசி ஒரே ஒரு ரன் மட்டுமே கொடுத்து ராஜஸ்தானை வெற்றி பெறச் செய்தவர் கார்த்திக் தியாகி. அதற்கு முன்னதாக 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியிலும் விளையாடியவர். 2020-21 இந்திய அணியின் ஆஸ்திரேலிய பயணத்தில் கூடுதல் பவுலராக அணியில் சேர்க்கப்பட்டவர்.

தற்போது தனது டொமஸ்டிக் கிரிக்கெட் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துள்ளார் அவர். அதில் தான் ரெய்னா குறித்து சொல்லியுள்ளார்.

"எனது டீன்-ஏஜில் நான் எங்கள் மாநில அணிக்காக அண்டர்-14 மற்றும் அண்டர்-16 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தேன். அதில் அண்டர்-16 தொடர் ஒன்றில் 7 போட்டிகள் மட்டுமே விளையாடி 50 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தேன். அங்கிருந்து மாநில தேர்வர்களின் கவனத்தை ஈர்த்து ரஞ்சி முகாமிற்குள் நான் நுழைந்தேன். ஞானேந்திர பாண்டே சார் இதற்கு முக்கியக் காரணம்.

அப்போது எனக்கு 16 வயதுதான். அணியில் இருந்த வீரர்கள் அனைவரும் ஓரளவுக்கு பிரபலமான வீரர்கள். அப்போது ரெய்னாவும் அங்கு வந்திருந்தார். நான் அமைதியாக அனைத்தையும் கவனிப்பேன். அவர் பயிற்சி முடித்து புறப்பட தயாரானார். அப்போது திடீரென என்னிடம் வந்து பேசினார். எனது ரோல் என்ன எனக் கேட்டார். நான் பவுலர் எனச் சொன்னேன். பந்து வீசச் சொன்னார். அதை செய்தேன்.

தொடர்ந்து எனது பவுலிங் அவருக்கு பிடித்துள்ளதாகவும், வரும் நாட்களில் வாய்ப்பு கிடைக்கும் என்றும் உறுதி அளித்து சென்றார். அதன் பிறகு ரஞ்சி அணியில் எனது பெயர் இடம் பெற்றிருந்தது. அது எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது. அதன் பிறகே எனது திறன் எல்லோரது பார்வையையும் பெற்றது. என் வாழ்க்கையில் சுரேஷ் ரெய்னா கடவுளைப் போல நுழைந்தார் என்பதை எப்போதும் நான் சொல்வேன்" என தெரிவித்துள்ளார் கார்த்திக்.

நடப்பு சீசனில் அவர் இதுவரையில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. வாய்ப்புக்காக இந்த இளம் பவுலர் தற்போது காத்துள்ளார். ரெய்னா மற்றும் கார்த்திக் தியாகி என இருவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT