மும்பை: ஐபிஎல் 15வது சீசன் 32வது லீக் ஆட்டத்தில் கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
116 ரன்கள் என்ற எளிதான இலக்கை துரத்திய டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு பிரித்திவி ஷா மற்றும் டேவிட் வார்னர் இணை சிறப்பான துவக்கம் கொடுத்தது. இருவரும் முதல் ஐந்து ஓவர்களிலேயே 75 ரன்களை சேர்த்து அதிரடி காட்டினர். பவர்பிளே ஓவர்களை சிறப்பாக பயன்படுத்திய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி எளிதாக வெற்றி இலக்கை நெருங்கினர். இருவரையும் பிரிக்க பஞ்சாப்பின் பாஸ்ட் பவுலர்கள் எவ்வளோ முயன்றும் முடியவில்லை.
7வது ஓவர் வீசிய சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சஹாரே இவர்கள் பார்ட்னர்ஷிப்பை பிரித்தார். 41 ரன்கள் சேர்த்திருந்த பிரித்திவி ஷா எல்லீஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மறுபுறம் இருந்த டேவிட் வார்னர் ஐபிஎல்லில் தனது 53வது அரை சதத்தையும் இந்த சீசனில் தனது மூன்றாவது அரை சதத்தையும் எட்டி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 10.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.
பஞ்சாப் அணி தரப்பில் ராகுல் சஹார் மட்டுமே ஒரு விக்கெட் எடுத்தார். அதேநேரம் டெல்லி தரப்பில் வார்னர் 60 ரன்கள் எடுத்திருந்தார்.
பஞ்சாப் கிங்ஸ் இன்னிங்ஸ்: இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் பவுலிங்கை தேர்வு செய்ய பஞ்சாப் முதலில் பேட்டிங் களமிறங்கியது. ஷிகர் தவான் இந்தமுறை நிலைக்க தவறினார். 9 ரன்களில் லலித் யாதவ் சுழலில் சிக்கி அவர் வெளியேறினார். இதன்பின் வந்த ஜானி பேர்ஸ்டோவ் 9 ரன்கள் மற்றும் லியோன் லிவிங்ஸ்டோன் 2 ரன்கள் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் டாப் ஆர்டர் அடுத்தடுத்து அவுட் ஆக, டெல்லி பவுலர்களின் கை ஓங்கியது.
இந்த மொமண்ட்த்தை அப்படியே எடுத்துச் சென்றனர் டெல்லி ஸ்பின் பவுலர்களான குல்தீப் யாதவ், லலித் யாதவ் மற்றும் அக்சர் படேல். இதனால், பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்க திணறியதுடன் சீரான இடைவெளியில் தங்கள் விக்கெட்டையும் பறிகொடுத்தனர். விக்கெட் கீப்பர் ஜிதேஷ் ஷர்மா மற்றும் கேப்டன் மயங்க் அகர்வால் மட்டுமே ஓரளவு நிலைத்து ஆடினர். ஜிதேஷ் ஷர்மா அதிகபட்சமாக 32 ரன்களும், அவருக்கு அடுத்தபடியாக மயங்க் அகர்வால் 24 ரன்களும் எடுத்தனர்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே சேர்த்தது.