ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய சாஹல். 
விளையாட்டு

IPL 2022 | ஆட்டத்தின் முடிவை மாற்ற நான் விக்கெட் வீழ்த்த வேண்டியிருந்தது - ஹாட்ரிக் குறித்து சஹால்

செய்திப்பிரிவு

மும்பை: "ஆட்டத்தின் முடிவை மாற்ற நான் விக்கெட் வீழ்த்த வேண்டியிருந்தது" எனத் தெரிவித்துள்ளார் நேற்றைய ஐபிஎல் லீக் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய ராஜஸ்தான் வீரர் சாஹல்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேற்று பிராபேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடின. இந்தப்போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான், 217 ரன்கள் குவித்தது. தொடர்ந்து அந்த இலக்கை விரட்டிய கொல்கத்தா 210 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, ஆட்டத்தையும் இழந்தது. ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு சஹாலின் பந்துவீச்சு பிரதான காரணமாக அமைந்தது.

கொல்கத்தா அணி மிகச் சுலபமாக இந்த போட்டியை வென்று விடும் என்ற சூழலே இருந்தது. அப்போது 17வது ஓவரை வீசிய சஹால், நான்கு விக்கெட்டுகளை அந்த ஓவரில் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 40 ரன்கள் கொடுத்த அவர், மொத்தம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

"ஆட்டத்தின் முடிவை மாற்ற நான் விக்கெட் வீழ்த்த வேண்டியிருந்தது. நான் எனது பவுலிங்கில் நிறைய பயிற்சி மேற்கொண்டேன். அது தொடர்பாக பயிற்சியாளர் மற்றும் கேப்டன் வசம் பேசியிருந்தேன். நான் கூக்லி வீசலாம் என யோசித்தேன். ஆனால் அதை செய்யவில்லை. ஹாட்ரிக் விக்கெட்டுகளுடன் டாட் பந்துகள் வீசியதில் எனக்கு மகிழ்ச்சி" எனத் தெரிவித்துள்ளார் சஹால். இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்றது அவர்தான்.

SCROLL FOR NEXT