லிஸ்பன்: அண்மையில் தங்களுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஆண் குழந்தை உயிரிழந்ததாக கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோவும் அவரது மனைவியும் கூட்டாக அறிவித்துள்ளனர்.
போர்ச்சுகல் நாட்டு கால்பந்தாட்ட வீரர் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்தாட்ட கிளப் அணியில் விளையாடி வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கால்பந்தாட்ட உலகிலேயே அதிக கோல்களைப் பதிவு செய்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். 37 வயதான அவருக்கு ஆறு குழந்தைகள். அண்மையில் அவரது இணையர் ஜார்ஜினா ரோட்ரிகஸ் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.
அதில் ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. இந்தத் தகவலை ரொனால்டோ தற்போது உலக மக்களுடன் பகிர்ந்துள்ளார். இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
"எங்கள் மகன் இறந்துவிட்டான் என்பதை நாங்கள் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். எல்லா பெற்றோரும் உணரக்கூடிய வலி இது. எங்களது பெண் குழந்தையின் பிறப்பு இந்நேரத்தில் எங்களுக்கு சக்தியையும், நம்பிக்கையையும் கொடுத்துள்ளது.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என சுகாதாரப் பணியாளர்களின் அக்கறையான கவனிப்பிற்கும், ஆதரவுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். ஆருயிர் மகனை இழந்து மீளாத் துயரில் மூழ்கியுள்ளோம். இந்தக் கடினமான நேரத்தில் எங்களுக்கு தனிமைதான் தேவை. மகனே, நீ எங்கள் ஏஞ்சல். என்றென்றும் நாங்கள் உன்னை நேசிப்போம்" என ரொனால்டோவும், அவரது இணையரும் கூட்டாக தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.