மும்பை: 'ஆண்கள் அணியில் அவர்கள் பயன்படுத்திய சீருடைகள் மீண்டும் தைக்கப்பட்டு பெண்கள் கிரிக்கெட் அணிக்கு கொடுக்கப்பட்டன' என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) நிர்வாகிகள் குழுவின் முன்னாள் தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.
வினோத் ராய் எழுதியுள்ள 'நாட் ஜஸ்ட் எ நைட் வாட்ச்மேன்' என்ற புத்தகத்தில் பிசிசிஐ பணி குறித்து எழுதியுள்ளார். இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேசியவர், "முன்பு மகளிர் அணியில் வீராங்கனைகளுக்கான ஜெர்சி என்பது ஆண்கள் அணியில் அவர்கள் பயன்படுத்திய ஜெர்சியை மீண்டும் தைக்கப்பட்டே வழங்கப்பட்டு வந்தது. அந்த அளவு இந்திய பெண்கள் கிரிக்கெட் நிலை இருந்தது. பெண்கள் கிரிக்கெட்டுக்கு உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்றே நான் நினைக்கிறேன். 2006 வரை இந்த நிலையே இருந்தது.
ஷரத் பவார் ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் சங்கத்தை இணைக்கும் வரை இந்த நிலையே நீட்டித்தது. அனைத்து வசதிகளையும் பெறுவதற்கு மிகவும் தகுதி உடையது பெண்கள் அணி. எனவே அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்க முயற்சித்தோம்.
2017 ஐசிசி உலகக் கோப்பையில் இந்தியா இறுதிப் போட்டிக்கு வந்த பிறகு, பெண்கள் கிரிக்கெட்டுக்கு உரிய கவனம் கிடைத்தது. ஆனால் இந்த தொடரில் பங்கேற்க சென்ற அவர்களுக்கு ஹோட்டலில் சரியான உணவுகூட கிடைக்கவில்லை. வீராங்கனைகள் காலை உணவாக சமோசாவை சாப்பிட்டது தெரிந்து அதிர்ந்தேன். சரியாக சாப்பிடாததால் அரையிறுதியில் 171 ரன்கள் எடுத்து இந்தியாவை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற ஹர்மன்ப்ரீத் கவுர் களத்தில் ரன்கள் எடுக்க அதிகமாக ஓட முடியவில்லை என்ற வேதனையை வெளிப்படுத்தினார்" என்று இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட்டின் நிலை குறித்து குறிப்பிட்டுள்ளார் வினோத் ராய்.