சிஎஸ்கே பவுலர் கிறிஸ் ஜோர்டான். 
விளையாட்டு

IPL 2022 | நடப்பு சீசனில் ஒரே போட்டியில் அதிக ரன்களை கொடுத்த சிஎஸ்கே பவுலர் ஜோர்டான் 

செய்திப்பிரிவு

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் ஒரே போட்டியில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலராகியுள்ளார் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டான்.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆட்டத்தை இழந்தது. இந்த போட்டியில் சென்னை அணியின் பந்து வீச்சாளர் ஜோர்டான் 3.5 ஓவர்கள் வீசி, 58 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதில் அவர் வீசிய மூன்றாவது ஓவரில் மட்டும் 25 ரன்கள் கொடுத்திருந்தார். அந்த ஒரு ஓவர் ஆட்டத்தின் முடிவையே மாற்றி அமைத்தது எனவும் சொல்லலாம்.

இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 169 ரன்களை சேர்ந்திருந்தது. அதோடு நடப்பு சீசனில் ஆறு போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது சிஎஸ்கே. நடப்பு சீசனில் சென்னை அணியின் பந்து வீச்சு கொஞ்சம் பலவீனமாக இருப்பது போல தெரிவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் சொல்கின்றனர்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆல்-ரவுண்டரான ஜோர்டானை சென்னை அணி 3.60 கோடி ரூபாய்க்கு கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற மெகா ஏலத்தில் வாங்கியிருந்தது. இதே சீசனில் சென்னை அணியின் மற்றொரு பவுலரான முகேஷ் சவுத்ரி, 4 ஓவர்கள் வீசி 52 ரன்களை இதற்கு முன்னதாக ஒரு போட்டியில் விட்டுக் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் 22-ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT