மும்பை: ஐபிஎல் போட்டியின் 27-வது லீக் ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றிபெற்றுள்ளது.
190 என்ற இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு பிரிதிவி ஷா மற்றும் வார்னர் ஓப்பனிங் ஜோடி பவர் பிளேயில் 50 ரன்கள் வரை சேர்த்தது. சிராஜ் இவர்கள் பார்ட்னர்ஷிப்பை பிரித்தார். முதல் விக்கெட்டாக 16 ரன்கள் எடுத்திருந்த பிரிதிவி ஷா வெளியேறினார். இன்றைய போட்டியில் அறிமுகமான மிட்சேல் மார்ஷ் மந்தமாக துவங்கினாலும், அவரும் 14 ரன்கள் எடுத்திருந்த போது எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆகினார்.
முன்னதாக, அரைசதம் கடந்திருந்த வார்னர் 66 ரன்கள் எடுத்திருந்த போது ஹஸரங்கா பந்தில் எல்பி ஆகி வெளியேறினார். இதன்பின் வந்தவர்களில் ரிஷப் பந்த் மட்டும் 34 ரன்கள் எடுத்தார். அவரைத் தவிர மற்றவர்கள் பெரிதாக ரன்களை சேர்க்காமல் ஒற்றை இலக்கத்தில் நடையை கட்டினார்.
இறுதிக்கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட் விழ, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி 7 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. பெங்களூரு அணி தரப்பில் ஹேசில்வுட் மூன்று விக்கெட்களும், சிராஜ் இரண்டு விக்கெட்களும் வீழ்த்தினர்.
ராயல் சேலஞ்சர்ஸ் இன்னிங்ஸ்: டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, பெங்களூரு அணிக்கு ஃபப் டூபிளஸிஸ், அனுஜ் ராவத் இணை துவக்கம் கொடுத்தது. 2வது ஓவரிலேயே அனுஜ் ராவத் ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட்டானார். அடுத்த ஓவரில் டூ பிளஸிஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். நிலைத்து ஆடுவார் என நம்பியிருந்த விராட் கோலியும் 12 ரன்களில் ரன்அவுட் ஆகி நடையைக் கட்டினார். தொடர்ந்து வந்த பிரபு தேசாயும் பெரியதாக சோபிக்கவில்லை. 34 பந்துகளில் 55 ரன்களை எடுத்து பெங்களூரு அணிக்கு பெரிதும் நம்பிக்கை அளித்த மேக்ஸ் வெல்லை குல்தீப் யாதவ் வெளியேற்ற 12 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட்டை இழந்து 95 ரன்களை சேர்த்தது.
இதனையடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக்கும், ஷாபாஸ் அகமதும் இணைந்து தடுமாற்றத்திலிருந்து பெங்களூரு அணியின் ஸ்கோரை உயர்த்த நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து, 189 ரன்களை எடுத்தது. தினேஷ் கார்த்திக் 66 ரன்களும், ஷாபாஸ் அகமது 32 ரன்களும் எடுத்தனர்.